தொழில்நுட்ப வல்லுநரும், உலகின் டாப் கோடீஸ்வரரான எலான் மஸ்க், பிரதமர் நரேந்திர மோடிக்கு, விண்வெளிக்குச் சென்ற ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் வெப்பக் கவச ஓடு துண்டை பரிசாக அளித்துள்ளார். அப்போது, எலான் மஸ்க்கின் குழந்தைகளுக்கு 3 புத்தகங்களை பரிசாக கொடுத்தார், பிரதமர் மோடி.
மஸ்க்கை சந்தித்த மோடி:
பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக அமெரிக்கா சென்று, நாடு திரும்பினார். இந்நிலையில், அங்கு அதிபர் டிரம்ப்பை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்தும் , பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். அப்போது, அந்த பயணத்தில் , ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்கை, பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, எலான் மஸ்க்கின் கார் நிறுவனமான டெஸ்லா குறுத்தும், இந்தியாவில் முதலீடு செய்வது குறித்தும் பேசியதாக தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
மோடிக்கு பரிசளித்த எலான்:
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் ஒரு துண்டை பரிசாக கொடுத்திருக்கிறார் , எலான் மஸ்க். கொடுக்கப்பட்ட பரிசான வெப்ப கவச ஓடானது ( hexagonal ceramic tiles - heat shield ), விண்வெளியில் இருந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழையும் போது ஸ்டார்ஷிப் ராக்கெட்டை, வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு கொடுக்கப்பட்ட வெப்பக் கவச துண்டானது, கடந்த அக்டோபர் 13, 2024 அன்று ஸ்டார்ஷிப்பின் ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
எலான் மஸ்க் குழந்தைகளுக்கு பிரதமர் மோடியின் பரிசு:
மேலும், எலான் மஸ்க்கின் குடும்பத்தை சந்தித்த பிரதமர் மோடி, எலானின் மனைவி மற்றும் அவரது 3 குழந்தைகளையும் சந்தித்து மகிழ்ச்சிகரமாக உரையாடினார். அப்போது, எலானின் மூன்று குழந்தைகளுக்கு மூன்று புத்தகங்களை பரிசாக அளித்ததாக தகவல் தெரிவிக்கின்றன. நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கிரசண்ட் மூன், தி கிரேட் ஆர்.கே. நாராயண் தொகுப்புகள் மற்றும் பஞ்சதந்திரம் ஆகிய 3 புத்தகங்களை வழங்கியதாக தகவல் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பிரதமர் மோடி தெரிவித்ததாவது “ எலான் மஸ்க்கின் குடும்பத்தினரைச் சந்தித்ததும், பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து பேசியதும் மகிழ்ச்சியாக இருந்தது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்பானது, கௌரவம் மிக்க தருணம் என எலான் மஸ்க் தெரிவித்தார்.
Also Read: வாங்க மோடி, வரேன் டிரம்ப்.! அன்பு மட்டுமல்ல அலர்ட்டாக இருந்த 2 தலைவர்கள்: டாப் 5 முடிவுகள்..