பிரிட்டனில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அலை வீசி வரும் நிலையில், கிழக்கு லண்டனில் உள்ள டவர் பிளாக்கின் உச்சியில் ஏற்பட்ட பெரிய தீயை அணைக்க சுமார் 125 தீயணைப்பு வீரர்கள், 25 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.


 






கட்டிடத்தின் 17 வது மாடியில் உள்ள நான்கு அறைகள் கொண்ட குடியிருப்பில் இருந்து புகை வெளியேறுவதை ஆன்லைனில் பகிரப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் காணலாம். இதில், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக லண்டன் தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.


சம்பவ இடத்தில் இருந்த ஸ்டேஷன் கமாண்டர் கீத் சாண்டர்ஸ் இதுகுறித்து கூறுகையில், "மேல் தளத்திலிருந்து அதிகமான புகை வெளியானது. அதை  தேடி கண்டுபிடிப்பதற்காக தீ அணைப்பு குழுவினர் அங்கு சென்றனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் எதிரே உள்ள பகுதியில் அங்கிருந்த புல்லிலும் தீ பரவியது.


 






தீயை கட்டுக்குள் கொண்டு வர பணியாளர்கள் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உழைத்தனர், இப்போது புகை குறைந்துள்ளது," என்றார். தீ விபத்து ஏற்பட்ட பகுதியை மேலிருந்து காணவும் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் தீயணைப்புத் துறையினர் 32 மீட்டர் ஏணியையும் ட்ரோன்களையும் பயன்படுத்தினர் .


தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான வியூகங்களை உருவாக்க அதிகாரிகளுக்கு ட்ரோன்கள் உதவியது. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


 






இதற்கிடையில், செவ்வாயன்று லண்டனின் வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவியது. இதனால் தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டது. லண்டன் தீயணைப்புப் படை, நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தீயை அணைக்க 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு இயந்திரங்களை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.