கத்தாரில் ஒருவரின் குழந்தையை விலங்குகள் கடித்து குதறியதாக கூறப்பட்ட நிலையில், ஆயுதமேந்திய குழு குறிப்பிட்ட பகுதிக்குள் நுழைந்து 29 நாய்களைக் கொன்றது. மற்றவர்களை தாக்கி காயப்படுத்தி உள்ளனர். ஆயுதம் ஏந்திய குண்டர்கள், அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த ஊழியர்களை ஆயுதங்களைக் காட்டி மிரட்டினர். பின்னர், நாய்களுக்கு உணவுகளித்து பராமரிக்கப்படும் தொழிற்சாலை காலனிக்குள் நுழைந்தனர். 

Continues below advertisement


அந்த அடையாளம் தெரியாத நபர்கள், நாய்க்குட்டிகள் உட்பட 29 நாய்களை சுட்டுக் கொன்றனர். மேலும், பலரை தாக்கி படுகாயம் அடைய செய்தனர். இதை, தோஹாவை தளமாகக் கொண்ட மீட்பு தொண்டு நிறுவனமான PAWS Rescue Qatar சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தியது. துப்பாக்கி ஏந்தியவரின் குழந்தையை நாய்க்குட்டி ஒன்று கடித்ததால், தாங்கள் அந்த இடத்தை தாக்கி நாய்களை சுட்டுக் கொன்றதாக தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் இதுகுறித்து கூறுகையில், இச்சம்பவம் பயங்கரமானதாக இருந்ததாகவும் பாதுகாப்பற்ற விலங்குகளை அந்த கும்பல் சுட்டுக் கொல்ல மற்றவர்கள் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக தப்பி ஓடியதாகவும் கூறினார்.


இதுகுறித்து மேலும் விவரித்த அவர், "ஈத் முதல் நாள் அன்று அமைதியாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு அந்த கும்பல் வந்தது. பிடிபடுவதற்கான வாய்ப்பு குறைவு என்று தெரிந்ததால் அவர்கள் அந்த நேரத்தை தேர்ந்தெடுத்தார்கள் என்று நினைக்கிறேன்.


அவர்கள் பாதுகாவலர்களை ஆயுதங்களைக் காட்டி மிரட்டினர். பின்னர் மக்கள் தங்களின் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக ஓடினர். இது முற்றிலும் பயங்கரமானது. ஆனால் இது இங்கு அடிக்கடி நிகழ்கிறது. எதுவும் செய்ய முடியவில்லை. நாய்கள் தான் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளது. அந்த கும்பல் அவற்றை ஆயுதங்களை கொண்டு தாக்கியது. இது முற்றிலும் மோசமானது.


வன்முறை சம்பவத்திற்குப் பிறகு, தப்பி ஓடிய பல விலங்குகளை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் அவை பயங்கர காயங்களுடன் மறைந்திருப்பதாக அஞ்சுகிறோம்" என்றார்.


கத்தாரில் துப்பாக்கி வைத்திருக்க உள்துறை அமைச்சகத்திடம் உரிமம் பெற வேண்டும். 21 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் குற்றப் பதிவும் இல்லாதவராக இருக்க வேண்டும். இருப்பினும், உரிமம் இருந்தாலும், பொது இடங்களில் துப்பாக்கியை காட்ட அனுமதி இல்லை.