சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் மேற்கொண்ட ட்வீட் ஒன்றின் காரணமாக, ட்விட்டரில் நெட்டிசன்கள் பலரும் ட்விட்டர் நிறுவனத்தின் சட்டப் பிரிவுத் தலைவர் விஜயா கட்டேவை வறுத்து வருகிறார்கள். 


அமெரிக்க அரசின் உயரதிகாரியும், ட்ரம்ப் அரசின் மூத்த ஆலோசகருமான ஹண்டர் பைடனின் லேப்டாப் குறித்த செய்திக் கட்டுரை ஒன்றைத் தணிக்கை செய்ததாகவும், ட்விட்டர் நிறுவனத்தின் `டாப் தணிக்கைத்துறை வழக்கறிஞர்’ எனவும் கூறி வெளிவந்த செய்திக் கட்டுரை ஒன்றை பிரபல யூட்யூபர் சாகர் எஞ்செட்டி பகிர, அதில் கமெண்ட் செய்த எலான் மஸ்க், `ஒரு பெரிய செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கை, உண்மைச் செய்தியை வெளியிட்டதற்காக நீக்கியது முற்றிலும் தவறானது’ எனக் கூறியுள்ளார். 


எலான் மஸ்க் இவ்வாறு கூறிய பிறகு, விஜயா கட்டே மீது பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். கருத்து சுதந்திரத்தைத் தடை செய்வது குறித்த நேர்மையான விமர்சனமாக இல்லாமல், பெரும்பாலும் விஜயா கட்டேவின் இந்தியப் பின்புலத்தை வைத்து நிறவெறியுடன் பல்வேறு விமர்சனங்கள் பெருகி வருகின்றன. 



விஜயா கட்டே


யார் இந்த விஜயா கட்டே?


இந்தியாவில் பிறந்த விஜயா கட்டே, ட்விட்டர் நிறுவனத்தின் சட்டத்துறை, பொதுக் கொள்கை மற்றும் பாதுகாப்புத் துறையின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகம், நியூ யார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் லா முதலான கல்வி நிறுவனங்களில் கல்வி பெற்றவர் இவர். 


விஜயா கட்டே கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை, வில்சன் சோன்சினி குட்ரிச் அண்ட் ரோசாட்டி சட்டக் குழுமத்தில் பணியாற்றியுள்ளார். அதன்பிறகு, ஜூனிபர் நெட்வொர்க்ஸ் சட்டக் குழுமத்தின் மூத்த இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். 


கடந்த 2011ஆம் ஆண்டு, ட்விட்டர் நிறுவனத்தின் சட்டத்துறை தலைவராகப் பொறுப்பேற்றார் விஜயா கட்டே. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டதன் பின்னணியில் விஜயா கட்டே இருப்பதாகக் கூறப்பட்டு, அவர் மீது அப்போதே கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. 



எலான் மஸ்க்


தற்போது யூட்யூபர் சாகர் எஞ்செட்டி பகிர்ந்துள்ள செய்திக் கட்டுரையில், ட்விட்டர் நிறுவனத்தின் தலைவராக எலான் மஸ்க் வந்திருப்பதையொட்டி, அந்நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து மீட்டிங் ஒன்றில் பேசிய விஜயா கட்டே கண் கலங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் எலான் மஸ்க்கின் தலைமை மீது அவருக்கு பெரிதும் நம்பிக்கை இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. 






ஒருபக்கம் நெட்டிசன்கள் பலரும் விஜயா கட்டேவை விமர்சித்து வரும் நிலையில், மறுபக்கம் பலரும் எலான் மஸ்க் எவ்வாறு ட்விட்டர் நிறுவனத்தை நடத்துவதாகத் திட்டமிட்டுள்ளார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. மேலும், `கருத்து சுதந்திரம்’ என்ற பெயரில், வெறுப்பைத் தூண்டும் ட்வீட்களை எலான் மஸ்க் அனுமதிக்கப் போகிறாரா என்றும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.