கடந்த ஆண்டு இந்தியாவில் மதச் சுதந்திரம் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளதாக அமெரிக்க அரசின் குழு ஒன்று கருத்து தெரிவித்துள்ளதோடு, மதச் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களின் காரணமாக இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான ஆணையம் வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில், அமெரிக்க அரசின் `குறிப்பிட்ட அக்கறை செலுத்தப்பட வேண்டிய நாடுகள்’ என்ற பட்டியலில் இந்தியா இடம்பெற வேண்டும் எனத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வலியுறுத்தியுள்ளது.
இந்திய அரசு மதச் சுதந்திரத்தில் நிறுவன ரீதியாக, தொடர்ந்து, அருவெறுப்பான மீறல்களைச் செய்து வருவதாகவும், செய்பவர்களைப் பாதுகாத்து வருவதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான ஆணையம் உலகம் முழுவதும் நிகழும் அத்துமீறல்களை ஆவணப்படுத்துவதோடு, அமெரிக்க அரசுக்கு அதுகுறித்து பரிந்துரைகள் வழங்குகிறது. எனினும், மதச் சுதந்திரத்தின் அடிப்படையில் பொருளாதாரத் தடைகளை மேற்கொள்ளும் முடிவுகள் பிரத்யேகமாக அமெரிக்க அரசால் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன.
`கடந்த 2021ஆம் ஆண்டு, இந்திய அரசு தன்னுடைய கொள்கைகளின் மூலமாக, இந்து தேசியவாத கருத்தியலை முன்வைத்திருப்பதோடு, அது முஸ்லிம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், தலித்கள், பிற மதச் சிறுபான்மையினர் ஆகியோருக்கு பாதிப்பு அளித்துள்ளது’ என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
`நிலவும் சட்டங்களை மாற்றுவது, புதிய சட்டங்களை அமல்படுத்துவது, நாட்டின் மதச் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் விதமான சூழலை உருவாக்குவது முதலான வடிவங்களின் மூலமாக இந்திய அரசு தங்கள் கருத்தியலான இந்து நாட்டை உருவாக்குவதற்கான பணிகளை நிறுவன ரீதியாக தேசிய, மாநில அளவுகளில் மேற்கொண்டு வருகிறது’ எனவும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான இந்த அறிக்கையின் முடிவுகளை `ஒருபக்க சார்புடையவை’ எனக் கூறி இந்திய அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா மீதான கொள்கை, உக்ரைன் போர் முதலான விவகாரங்களின் காரணமாகவும், சீனாவுடனான போட்டியின் காரணமாகவும் இந்தியாவுடனான உறவைப் பலப்படுத்தி வருகிறது அமெரிக்க அரசு. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் காணொளி வாயிலாகச் சந்தித்துக் கொண்டனர். மேலும், அடுத்த மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் சந்திப்பிலும் இருவரும் கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான ஆணையம் இந்தியாவில் வாழும் மதச் சிறுபான்மையினரின் உரிமைகள் இந்திய அரசால் நசுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
மதச் சுதந்திரம் இல்லாத நாடுகள் எனக் கருதப்பட்டு, அமெரிக்க அரசின் தடை பட்டியலில் தற்போது சீனா, எரிட்ரியா, மியான்மர், ஈரான், வட கொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, சவுதி அரேபியா, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் முதலான நாடுகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.