சீனாவில் திங்களன்று 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, சமீபத்திய ஆண்டுகளில் தென்மேற்கில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றாகும்.


 






சிக்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கான மக்களை மீட்டு அவசரகால நிவாரணங்களை செய்வதற்காக மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. நிலநடுக்கத்தில் சிக்கி 65 பேர் இறந்தனர். 50,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


தற்போது ட்விட்டரில் நிலநடுக்கத்தின் தாக்கத்தை எடுத்துரைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், கட்டிடங்கள் இடிந்து விழுவதையும், கோபுரங்கள் நடுங்குவதையும் காணலாம். நிலநடுக்கம் ஏற்பட்ட போது, அதே தெருவில் நகரும் காரில் பொருத்தப்பட்ட டேஷ்கேமில் பதிவான இந்த வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது.


கிட்டத்தட்ட 250 பேர் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.


நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் சிக்கித் தவிக்கும் 200க்கும் மேற்பட்டவர்களை மீட்பதற்கும், தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் மின்சாரம் மற்றும் நீர் வசதிகளை மீட்டெடுப்பதற்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரிக்டர் அளவுகோலில் 6.8 என பதிவான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உணவு விநியோகம் செய்வதற்கும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


 






திங்கட்கிழமை மதியம் சிச்சுவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மாகாணத்தின் மேற்கில் உள்ள மலைப்பகுதியில் நிலநிடுக்கம் ஆழமாக மையம் கொண்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷான்சி மற்றும் குய்சோ மாகாணங்கள் வரை உணரப்பட்டது.


செவ்வாயன்று, பனிப்பாறை, பசுமையான காடுகள் மற்றும் பிரபலமான சுற்றுலாத் தலமான ஹைலூகோவில் 200 க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கித் தவிப்பதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. சிச்சுவானை பொறுத்தவரை அங்கு நிலநடுக்கம் வழக்கமாக ஏற்பட்டு வருகிறது.