பலர் கோடீஸ்வரர்களாக வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால், அனைவராலும் பணக்காரர்களாக ஆக முடிவதில்லை. இச்சூழலில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் சில மணிநேரங்களுக்கு பணக்காரராகி உள்ளார்.
தனது வங்கி கணக்கில் கோடிக்கனக்கான பணம் இருப்பதை கண்டு அந்த நபர் மகிழ்ச்சி கலந்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். பணம் எங்கிருந்து வந்தது என்று தெரியாததால், வங்கியை அழைத்து பிரச்னையை தீர்க்க முடிவு செய்துள்ளார். இதற்கிடையில், அவரது வங்கியில் இருந்த பணம் அவரை விர்ஜின் குழுமத்தின் உரிமையாளர் ரிச்சர்ட் பிரான்சனை விட 10 மடங்கு பணக்காரராக்கியது.
லூசியானாவை சேர்ந்த டேரன் என்ற தந்தைக்கு இந்த வினோதமான சம்பவம் நடந்துள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவரின் வங்கி கணக்கில் 50 பில்லியன் டாலர்கள் பணம் வரவு வந்திருப்பதாக மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. இதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, குழப்பமடைந்த அந்த நபர், மெசேஜ் சரியாக அனுப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த உடனடியாக தனது வங்கி கணக்கை சரிபார்த்தார்.
தனது வங்கிக் கணக்கில் இவ்வளவு பணம் வந்திருப்பதை உறுதி செய்தவுடன், டேரன் அச்சம் அடைந்துள்ளார். ஆட்களை தன் வீட்டிற்குள் புகுந்து சோதனையிடுவார்களோ என அவர் நினைத்துள்ளார். உடனே வங்கிக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறினார்.
முன்னதாக, லூசியானா பொதுப் பாதுகாப்புத் துறையில் சட்ட அமலாக்க அலுவலராக பணிபுரிந்த அந்த நபர், தான் இந்த பணத்தை சம்பாதிக்கவில்லை என்றும் அந்த பணத்தை யாருக்கும் கொடுக்கவில்லை என்றும் வங்கியிடம் தெளிவுப்படுத்தியுள்ளார். இதனால், அவரது வங்கிக் கணக்கு மூன்று நாட்களுக்கு முடக்கப்பட்டு, பின்னர் பணம் திரும்பப் பெறப்பட்டது.
டேரன் சில மணிநேரங்களுக்கு உலகின் 25 வது பணக்காரராக இருந்துள்ளார். சமீபத்தில், வெளியான ப்ளும்பெர்க் பணக்காரர்கள் பட்டியலில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, முதல் மூன்று இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
முகேஷ் அம்பானி மற்றும் ஜாக் மா ஆகியோர் பணக்காரர்கள் பட்டியலில் அடிக்கடி பெயரிடப்பட்டிருந்தாலும், அவர்கள் முதல் மூன்று இடத்தில் இடம்பெற்றதில்லை. LVMH Moet Hennessy நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் அதானி.
ப்ளூம்பெர்க் வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலில், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் அதானி இடம்பெற்று உள்ளார். இந்த பட்டியலின்படி, அதானியின் நிகர மதிப்பு 137 பில்லியன் டாலர்கள் ஆகும்.
உள்நாட்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் தற்போது பட்டியலில் 11வது இடத்தில் உள்ளார். அவரின் நிகர மதிப்பு 91.9 பில்லியன் டாலர்களாகும்.