போக்குவரத்து நெரிசல் நகரமயமாக்கலின் கொலாட்டரல் டிசாஸ்டர் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு நகரம் எவ்வளவுக்கு எவ்வளவு வளர்ச்சி காண்கிறதோ அதற்கேற்ப போக்குவரத்தும் விரிவடையும். போக்குவரத்து பெருகும் போது எத்தனை மேம்பாலங்கள், எத்தனை பொதுப் போக்குவரத்துகள், மோனோ ரயில், மெட்ரோ ரயில் என்று வசதிகளை ஏற்படுத்தினாலும் கூட போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது.
இதற்கு தீர்வு கண்டுள்ளனர் சீன போக்குவரத்து காவல்துறையினர். ஆம் ரிவர்ஸிபிள் லேன்ஸ் என்று இதற்குப் பெயர் வைத்துள்ளனர். அதாவது போக்குவரத்து பீக் அவரில் இதனைப் பயன்படுத்தி போக்குவரத்தை சீர் செய்கின்றனர்.
இதனை விவரித்து ஒரு ட்விட்டர் வீடியோவும் வெளியாகியுள்ளது. ஒரு அகலமான சாலையில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இருக்கும் பாதையை போக்குவரத்து அதிகாரிகள் இயந்திரத்தைக் கொண்டு தள்ளி வைக்கின்றனர். இதனால் ஒரு மார்க்கத்தில் வரும் வாகனங்களுக்கு கூடுதல் இடம் கிடைக்கிறது. இதே பாதையை காலை நேரத்தில் வேறுவிதமாக அட்ஜெஸ்ட் செய்வார்களாம். இதனால் இன்னொருபுறமிருந்து செல்லும் வாகனங்களுக்கு கூடுதல் இடம் கிடைக்கும். இப்படி காலை மாலை பீக் அவர்ஸில் கூடுதல் இடம் கிடைக்கும் வகையில் லேன்ஸ் மாற்றப்படுவதால் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறைவதாக போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோவை நெட்டிசன்கள் வெகுவாகக் கொண்டாடி வருகின்றனர். ஒருவர், புதுமைக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இது ஒரு சிறந்த உதாரணம். நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதில் மனித குலத்தின் ஞானம் அபாரமானது என்று நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.
இன்னொரு ட்விட்டராட்டி, 1962லேயே இத்தகைய ரிவர்ஸிபிள் லேன்ஸ் நடைமுறையில் இருந்தனர். கோல்டன் கேட் ப்ரிட்ஜ் தான் முதல் ரிவர்ஸிபிள் லேன் என்று பதிவிட்டுள்ளார்.
மற்றுமொருவர், வண்ண வண்ண விளக்குகளாலும், போக்குவரத்துக் குறியீடுகள் கொண்டும் போக்குவரத்தை சீர் செய்வதைக் காட்டிலும் இது சாதுர்யமான, பாதுகாப்பான நடவடிக்கை என்று பாராட்டியுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் ஏ அண்ட் எம் ட்ரான்ஸ்போர்ட்டேஷன் இன்ஸ்டிட்யூட் பீஜிங் நகரின் ரிவர்ஸிபிள் லேன் குறித்து, இத்தகைய ரிவர்ஸிபிள் லேன்கள் நெரிசலைக் குறைப்பதோடு மாற்று வழியில் இருந்து ஒரு லேனைக் கூடுதலாகப் பெற்றுக் கொள்வதால் பீக் அவர்ஸில் பெரும் வரப்பிரசாதமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.