இன்ஸ்டாவில் அதிகம் புழங்கும் ஆள் என்றால் உங்களுக்கு நிச்சயம் கிம் கர்தாஷியனைத் தெரியும். மாடல், அழகுசாதன பொருட்கள் விற்பனை, உள்ளாடை பிஸினஸ் என பல்வேறு பிஸினஸ்களில் தீவிரமாக இயங்கி வரும் கிம், இன்ஸ்டாவில் படு தீவிரமாக இயங்கி வருவார். இன்ஸ்டாவே அவருக்கு ஒரு பிஸினஸ்தான். ஏதேனும் விளம்பரம் தொடர்பான போஸ்ட் என்றாலே கோடிக்கணக்கில் சம்பாதிப்பார் கிம்.  அவருடைய உடலமைப்பே அவருக்கு பலம் என்பதுபோல போட்டோக்களையும் தொடர்ந்து பதிவிடுவார். 






இன்ஸ்டாவில் அவருக்கு தற்போது 324 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள்  உள்ளனர். அதாவது கிட்டத்தட்ட 32 கோடிக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ். இப்படி கொடிகட்டிப்பறக்கும் கிம் அழகால் கவரப்பட்ட பெண் ஒருவர் அவரைப்போலவே மாற கிட்டத்தட்ட 40க்கும் அதிகமான அறுவை சிகிச்சைகளை செய்து தன்னுடைய மொத்த உருவத்தையே மாற்றியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 29 வயதான ஜெனிபர் என்பவர் சுமார் ரூ.4.7 கோடி செலவு செய்து இந்த உருவ மாற்றத்தை செய்துள்ளார். 17 வயதில் தன்னுடைய முதல் அறுவை சிகிச்சையை தொடங்கிய ஜெனிபர் 12 வருடங்களில் 40 அறுவை சிகிச்சையை செய்துள்ளார். 4 கோடி செலவு, 40 அறுவை சிகிச்சை என உடலை மாற்றம் செய்த ஜெனிபருக்கு கடைசியில் தன்னுடைய பழைய உடலே பிடித்திருக்கிறது. 




இது குறித்து தெரிவித்த அவர், “கிம் போல மாற நினைத்து கடைசியில் என்னுடைய சுயத்தையே நான் இழந்துவிட்டேன். நான் பிஸினஸ் செய்தேன், மாடலாக இருந்தேன். ஆனால் என்னை அனைவரும் கிம் என்றே அழைத்தனர். நான் உண்மையில் யார் என்பதே காணாமல் போய்விட்டது. அறுவை சிகிச்சைக்கு நான் அடிமையாகிவிட்டேன் என்பதை உணர்ந்தேன். அதனால் மீண்டும் பழைய உடலையும் தோற்றத்தையும் பெற நினைத்தேன்” என்றார்.






தற்போது மருத்துவர் ஒருவரை தேடிப்பிடித்த ஜெனிபர் ரூ.95 லட்சம் செலவு செய்து தன்னுடைய பழைய உருவத்துக்கு மாறி வருகிறார். நான் நானாக இருப்பதுதான் அழகு என தெரிவிக்கும் ஜெனிபர், அழகுக்கு அடிமையாவது குறித்து ஆவணப்படத்தையும் எடுத்து வருகிறார்.