கோவிட் பாதிப்பு சில ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில் பலரும் கொரோனா குறித்து பல வதந்திகளை பரப்பி வருகின்றனர். அவ்வப்போது கோவிட் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கவில்லை. எப்படியோ இரண்டு கொரோனா அலைகளை கடந்து விட்டோம், இப்போது மூன்றாவது அலை உலகம் முழுவதும் பரவாமல் அங்கங்கே பரவி கொண்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில், கடந்த இரு நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது கடந்த 24 மணிநேரத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,448 ஆக குறைந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 796 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூலை 11-ஆம் தேதியில் தொற்று பாதிப்பினால் யாரும் உயிர் இழக்கவில்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புதிதாக கோவிட் தடுப்பூசி போட்ட ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் என்ற வதந்தி சோஷியல் மீடியாவில் பரவிய நிலையில், பாப் பாடகர் நிக்கி மினாஜின் பழைய ட்வீட்டும் சர்ச்சையை கிளப்பியது.
நிக்கி மினாஜ் அவரது ட்வீட்டில், ”எனது சகோதரர் கோவிட் தடுப்பூசியை போட்டுக்கொள்ள மாட்டார். எனது சகோதரரின் நண்பர் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அவரது ஆண்தன்மையை இழந்தார். கோவிட் தடுப்பூசி பக்கவிளைவினால் சில வாரங்களில் நடக்கவிருந்த அவரது திருமணம் நின்றது” என தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் குழுப்பங்களுக்கு பதிலாக, பல மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார நிறுவனங்கள், கோவிட் தடுப்பூசி போட்டால் ஆண்களுக்கு ஆண்மைதன்மை குறையும் என எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றும், சர்ச்சையை பரப்புவது ஆபத்துக்கான வழிமட்டுமே என்றும், தண்டனைக்குரியது எனவும் தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.