Trump Ukraine: வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, ராணுவ உதவிகளை ட்ரம்ப் நிறுத்தியுள்ளார்.
உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்திய ட்ரம்ப்:
கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைதொடர்ந்து, உக்ரைனுக்கான ராணுவ உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை என்பது ”உக்ரைனுக்கான உதவியை நிரந்தரமாக நிறுத்துவது அல்ல, இது ஒரு இடைநிறுத்தம்" என்று ஃபாக்ஸ் நியூஸ் ஒரு வெள்ளை மாளிகை அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ”எங்கள் ராணுவ உதவிகள் நிறுத்தி வைப்பதன் மூலம் போர் முடிவுக்கு வருமா? என்பதை உறுதிப்படுத்த நாங்கள் ராணுவ உதவிகளை இடைநிறுத்தி மதிப்பாய்வு செய்கிறோம்” என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது அழுத்தம்:
ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புக்கொள்ள உக்ரைன் மீதான அழுத்தத்தை கடுமையாக அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ராணுவ உதவிகள் இடைநிறுத்தம் குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை என்று கூறினார்.அதேநேரம் அதற்கான வாய்ப்புகள் இருப்பதை அவர் நிராகரிக்கவும் இல்லை. அதோடு, ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் இல்லாமல் ஜெலென்ஸ்கி "நீண்ட காலம் அந்த பதவியில் இருக்க மாட்டார்" என்றும் அவர் பேசினார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸிக்கும், டிரம்புக்கும், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு, ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் வெளியேறுமாறு அவரிடம் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. போர் நிறுத்தம் மற்றும் கனிமவள ஆதாரங்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட, அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என ஜெலன்ஸ்கி கோரினார். ஆனால், ட்ரம்ப் அந்த உத்தரவாதங்களை வழங்க மறுத்ததால், இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஜெலன்ஸ்கி சொல்வது என்ன?
இதனிடையே, ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை ஒருமாத காலத்திற்கு நிறுத்தி வைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பேசிய ஜெலன்ஸ்கி, “விவாதங்கள் முதல் படிகளிலேயே உள்ளன. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் மிக மிக தொலைவில் உள்ளது" என குறிப்பிட்டார். மேலும், “உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களுடன் மட்டுமே உண்மையான, நேர்மையான அமைதி வரும். 11 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாததால் தான் கிரிமியா ஆக்கிரமிப்பு மற்றும் டான்பாஸில் போர் ஆகியவற்றில் ரஷ்யாவால் ஈடுபட முடிந்தது. பின்னர் பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாதது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்க அனுமதித்தது” என ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைனின் கருத்துகளை நிராகரித்துள்ள ரஷ்யா, ஜெலன்ஸ்கி அமைதியை விரும்பவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது. அதோடு, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் மிக மிக தொலைவில் உள்ளது என்ற ஜெலன்ஸ்கியின் கருத்தும், ட்ரம்பை கோபமடைய செய்துள்ளது.