அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். ஜனநாயகம், பயங்கரவாதம், போர் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் அவர் பேசினார். அவர் தெரிவித்த முக்கிய கருத்துகளை கீழே காண்போம்.


"அன்பை உணர்கிறேன்"


"அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது எப்போதும் பெரும் கௌரவமாகும். இரண்டு முறை உரையாற்றுவது மிகச் சிறந்த பெருமைக்குரிய விஷயமாகும். இந்த கௌரவத்தை அளித்தமைக்காக 140 கோடி இந்திய மக்களின் சார்பில் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். 2016 ஆம் ஆண்டில் உங்களில் கிட்டத்தட்ட பாதி பேர் இங்கே இருந்ததை என்னால் காண முடிகிறது.


பழைய நண்பர்களாக உங்கள் அன்பை உணர்கிறேன். மறுபாதியில் ஒரு புதிய நட்பின் உற்சாகத்தையும் என்னால் பார்க்க முடிகிறது. செனட்டர் ஹாரி ரீட், செனட்டர் ஜான் மெக்கெய்ன், செனட்டர் ஓரின் ஹாட்ச், எலியா கம்மிங்ஸ், ஆல்சி ஹேஸ்டிங்ஸ் உள்ளிட்ட உறுப்பினர்களை நான் நினைவில் வைத்திருக்கிறேன், அவர்கள் 2016 ஆம் ஆண்டில் இங்கு என்னைச் சந்தித்தனர், அவர்கள் இப்போது இங்கு நம்முடன் இல்லாதது வருத்தமளிக்கிறது.


ஏழு ஜூன் மாதங்களுக்கு முன்பு, அதாவது ஜூன் மாதத்தில் ஹாமில்டன் அனைத்து விருதுகளையும் வென்றபோது, வரலாற்றின் தயக்கங்கள் நமக்கு பின்னால் உள்ளன என்று நான் சொன்னேன். இப்போது, நமது சகாப்தம் ஒரு சந்திப்பில் இருக்கும்போது, இந்த நூற்றாண்டுக்கான நமது அழைப்பைப் பற்றிப் பேச நான் இங்கு வந்துள்ளேன். நாம் பயணித்த நீண்ட மற்றும் வளைந்த பாதையில், நட்பின் சோதனையைச் சந்தித்துள்ளோம்.


"மக்களின் நாடித்துடிப்பை உணர்வதுதான் ஜனநாயகத்தின் அழகு"


ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்ததிலிருந்து நிறைய மாறிவிட்டது. ஆனால் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்பை ஆழப்படுத்துவதற்கான நமது உறுதிப்பாடு போன்ற பல விஷயங்கள் அப்படியே உள்ளன. கடந்த சில ஆண்டுகளில், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில், அமெரிக்கா மற்றும் இந்தியா என்னும் மற்றொரு ஏஐ-ல் இன்னும் முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.


மக்களோடு தொடர்ந்து இணைந்திருப்பதும், அவர்கள் சொல்வதைக் கேட்பதும், அவர்களின் நாடித்துடிப்பை உணர்வதும்தான் ஜனநாயகத்தின் அழகு. மேலும், இதற்கு நிறைய நேரம், ஆற்றல், முயற்சி மற்றும் பயணம் தேவை என்பதை நான் அறிவேன். இது ஒரு வியாழக்கிழமை பிற்பகல் - உங்களில் சிலருக்கு வெளியே செல்லும் நாளாகும். எனவே, உங்கள் நேரத்திற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த மாதம் நீங்கள் எவ்வளவு பரபரப்பாக இருந்தீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.


துடிப்பான ஜனநாயகத்தின் குடிமகன் என்ற முறையில், ஒரு கடினமான பணியில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்பதை நான் ஒப்புக் கொள்ள முடியும். ஆர்வம், இணக்கம் மற்றும் கொள்கை ஆகியவற்றுக்கிடையே உள்ள போராட்டங்களுடன் என்னால் தொடர்புபடுத்த முடியும். கருத்துக்கள் மற்றும் சித்தாத்தங்களின் விவாதத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.


ஆனால், உலகின் இருபெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிணைப்பைக் கொண்டாட நீங்கள் இன்று ஒன்றிணைவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கு வலுவான இருகட்சி கருத்தொற்றுமை ஏற்படும்  போதெல்லாம் உதவுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வீட்டில் கருத்துப் போட்டி இருக்கும் - இருக்க வேண்டும். ஆனால், நம் தேசத்திற்காக பேசும்போது நாமும் ஒன்றாக ஒன்றிணைய வேண்டும். இந்த விஷயத்தில் உங்களால் முடியும் என்பதை நிரூபித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!


"உலகிற்கு ஒரு சிறந்த எதிர்காலம்; எதிர்காலத்திற்கு ஒரு சிறந்த உலகம்"


ஜனநாயகம் என்பது நமது புனிதமான மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளில் ஒன்றாகும். இது நீண்ட காலமாக பரிணாம வளர்ச்சியடைந்து, பல்வேறு வடிவங்களையும் அமைப்புகளையும் எடுத்துள்ளது. ஆனால், வரலாறு நெடுகிலும் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஜனநாயகம் என்பது சமத்துவத்தையும் கண்ணியத்தையும் ஆதரிக்கும் உணர்வாகும்.


ஜனநாயகம் என்பது விவாதத்தையும் உரையாடலையும் வரவேற்கும் கருத்தாகும். சிந்தனைக்கும், கருத்துக்கும் சிறகுகள் கொடுக்கும் கலாச்சாரம்தான் ஜனநாயகம். பழங்காலத்திலிருந்தே இத்தகைய விழுமியங்களை இந்தியா கொண்டிருக்கிறது. ஜனநாயக உணர்வின் பரிணாம வளர்ச்சியில், இந்தியா ஜனநாயகத்தின் தாயாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, நமது பழமையான வேதங்கள்,  உண்மை ஒன்று, ஆனால் ஞானிகள் அதை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள் என்று கூறுகின்றன.


இப்போது, அமெரிக்கா பழமையான ஜனநாயக நாடு. இந்தியாவோ மிகப்பெரிய ஜனநாயக நாடு. நமது கூட்டணி ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு நல்லது. நாம் ஒன்றிணைந்து, உலகிற்கு ஒரு சிறந்த எதிர்காலத்தையும், எதிர்காலத்திற்கு ஒரு சிறந்த உலகத்தையும் கொடுப்போம்" என்றார்.