அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்க சென்ற நிலையில், அங்கு பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. பாதுகாப்பு தொடங்கி விண்வெளி ஆய்வு வரை, பல துறைகளில் இந்திய அமெரிக்க நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஒப்பந்தம்:
இந்நிலையில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வே நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடைவது தொடர்பாக இந்திய, அமெரிக்க நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்தியன் ரயில்வேஸ் மற்றும் சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை ஆகியவை இணைந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, இரு நாடுகளின் கூட்டு நிபுணத்துவம், வளங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் ஆகியவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆற்றல் திறன் மற்றும் ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பங்களை விரைவுபடுத்த, நிகர-பூஜ்ஜிய இலக்குடன் சீரமைக்கப்படும்.
அமெரிக்காவுடன் கைக்கோர்க்கும் இந்தியன் ரயில்வே:
சர்வதேச வளர்ச்சிக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி மற்றும் இந்திய இரயில்வே ஆகியவை இணைந்து ஆற்றல் திறனை மேம்படுத்த உள்ளது. கார்பன் தடயங்களைக் குறைக்க உள்ளது. பசுமையான எதிர்காலத்தை உறுதி செய்யும் நிலையான தீர்வுகளை உருவாக்க உள்ளது.
சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமையின் துணை நிர்வாகி இசோபெல் கோல்மேன் மற்றும் இந்திய ரயில்வே வாரிய உறுப்பினர் நவீன் குலாட்டி ஆகியோர், கடந்த ஜூன் 14ஆம் அன்று இந்திய ரயில்வேயின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அனில் குமார் லஹோட்டி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை மற்றும் இந்திய இரயில்வே ஆகியவை நீண்டகாலமாக இணைந்து செயல்பட்டு வருகிறது. பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைத்தல், ஆற்றல் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் நிலையான நடைமுறைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்தியா முழுவதும் உள்ள சுமார் 1,000 ரயில் நிலையங்களில் சோலார் பேனல்கள் மற்றும் ஆற்றல்-திறனுள்ள விளக்குகள் மற்றும் உபகரணங்களை இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து நிறுவியுள்ளன.
ஆர்டெமிஸ் உடன்படிக்கையில் இணைந்த இந்தியா:
ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் விண்வெளிப் பிரிவு, இந்திய விமானப்படைக்கு இந்தியாவில் போர் விமானங்களைத் தயாரிக்க, அரசுக்குச் சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல, ஆர்டெமிஸ் உடன்படிக்கையில் நேற்று இந்தியா இணைந்துள்ளது.
வரும் 2024ஆம் ஆண்டுக்குள், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்காவின் நாசாவும் இந்தியாவின் இஸ்ரோவும் இணைந்து செல்ல ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, இதில் இந்தியா இணைந்திருப்பது குறித்து அமெரிக்க அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "மனிதகுலத்தின் நலனுக்காக விண்வெளி ஆய்வுக்கான பொதுவான பார்வையை முன்னெடுத்து செல்லும் ஆர்டெமிஸ் உடன்படிக்கையில் இந்தியா இணைய உள்ளது என்பதை அறிவிக்க உள்ளோம்" என்றார்.