கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து லூசியானா மாநிலங்கள் வரையிலான பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரான இந்த காலநிலையை எதிர்ப்பதே அமெரிக்க மக்களுக்கு பெரும் சவாலாக தற்போது மாறிவருகிறது.
அமெரிக்காவில் பெரும்பாலான பகுதிகளில் கண்மூடித்தனமான பனிப்பொழிவு, பனிக்கட்டி மழை மற்றும் பலத்த காற்று தொடங்கியது. இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக மத்திய மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விமான சேவைகளில் தாமதம் மற்றும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டு வருவதால் நூற்றுக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கி தவித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக வடக்கு டகோட்டாவில் உள்ள பிஸ்மார்க்கில் காலை வெப்பநிலை மைனஸ் 26 டிகிரி செல்சியஸாக குறைந்தது. வரும் நாட்களில் மைனஸ் 29 டிகிரியாக குறையும் என அஞ்சப்படுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு அடி வரை பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்றை அமெரிக்க மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக 2,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த புயலில் தாக்கத்தால் பள்ளிகள் மற்றும் சாலைகள் மூடப்பட்டு மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
குறைந்தது 60 பேர் உயிரிழப்பு:
மழை, பனி, காற்று மற்றும் கடுமையான குளிர் வெப்பநிலை ஆகியவை காரணமாக கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் குறைந்தது 60 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தகவலின்படி, டென்னசியில் 14 பேரும், ஒரேகானில் மூன்று பேரும், பிற மாநிலங்களில் மொத்தமாக 43 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (அதிகாரப்பூர்வ தகவல் இல்லை)
மேலும், இந்த புயல் காரணமாக பெரும்பாலான இடங்களில் மின்சாரம் இல்லாமல் போனது. இதன் காரணமாக, சுமார் 90,000 பேர் மின்சாரம் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய வானிலை சேவை மையம் 26 மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்குடகோட்டாவிலிருந்து புளோரிடா வரை மிகக் குளிர்ந்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பனிகாலம் இன்னும் முடிவடையததால், இன்னும் சில நாட்கள் பனியின் தாக்கம் தீவிரமடையும் என்று கூறப்படுகிறது.
மின்சாரம் இல்லாமல் தவிப்பு:
அமெரிக்காவில் 150 மில்லியனுக்கு மேல் அதிகமாக வாழும் மக்கள் தொடர்ந்து இந்த பனி புயலால் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக மத்திய மேற்கு பகுதி முழுவதும் பலத்த பனிக்காற்றை எதிர்கொண்டுள்ளனர். கிரேட் லேக்ஸ் மற்றும் தெற்கு முழுவதும் உள்ள சுமார் 2.50 லட்சம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவித்துள்ளனர். சில இடங்களில் இன்னும் மின்சாரம் சேவை இல்லாததால் இதை சரிசெய்ய குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பெரும்பகுதிக்கு பனி புயல் எச்சரிக்கைகள் இருப்பதால், நிக்கி ஹேலி, ரான் டிசாண்டிஸ் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வரவிருக்கும் அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னதாக தங்கள் அட்டவணையை மாற்றி அமைத்துள்ளனர்.
நியூ யார்க் நகரம், பால்டிமோர் மற்றும் வாஷிங்டன், டி.சி., ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமையும், இந்தியானாவின் மிச்சிகன் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.