காசாவில் ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ஆகியவைக்கு இடையே நடந்து வரும் போர் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. காசா போரில் தலையிட மாட்டோம் என ஈரான் கூறி வந்தாலும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீதும் அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.


தெற்காசியாவில் சூழ்ந்த போர் மேகம்:


அதன் தொடர்ச்சியாக, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, பாகிஸ்தானில் ஈரான் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் மூன்று பேர் காயம் அடைந்திருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. 


பாகிஸ்தான் பலுசிஸ்தானில் ஈரான் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் விமானப்படை நேற்று பதில் தாக்குதல் நடத்தியிருப்பது போர் பதற்றத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றது. விமானப்படை நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தங்கள் நாடுகளில் செயல்பட பயங்கரவாதிகளுக்கு இடம் கொடுப்பதாக ஈரானும் அணு ஆயுதம் கொண்ட பாகிஸ்தானும் பரஸ்பரம் குற்றம் சுமத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. இருப்பினும், ஒரு நாட்டின் எல்லையின் மற்றொரு நாட்டின் படைகள் தாக்குதல் நடத்துவது அரிதிலும் அரிதாக நிகழ்கிறது.


ஐநா பரபரப்பு கருத்து:


மேற்காசியாவில் இருந்து தெற்காசியாவுக்கு போர் பதற்றம் பரவியுள்ள நிலையில், இரு நாடுகளையும் அமைதி காக்கும்படி ஐநா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கூறுகையில், "கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள இரண்டு அரசாங்கங்களையும் கேட்டு கொள்கிறேன்" என்றார்.


இதுதொடர்பாக விரிவாக பேசிய ஐநா பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், "ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய ராணுவத் தாக்குதல்களால் இரு தரப்பிலும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுச்செயலாளர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்" என்றார்.


பாகிஸ்தான், ஈரான் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் மோதல் குறித்து பேசியுள்ள அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, "நிலைமையை மிக உண்ணிப்புடன் கண்காணித்து வருகிறது அமெரிக்கா. பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறது. இரண்டும் வலுவான ஆயுதம் ஏந்திய  நாடுகள். மீண்டும் ஒரு மோதலை நடக்க நாங்க விரும்பவில்லை" என்றார்.


தற்காப்பிற்காகவே பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "இது ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான விவகாரம். இந்தியாவைப் பொறுத்த வரையில், பயங்கரவாதத்தின் மீது சமரசமற்ற சகிப்புத்தன்மையைக் கொண்டுள்ளோம். தற்காப்புக்காக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம்" என்றார்.