அமெரிக்காவில் நிலவி வரும் மோசமான பனிப்புயலால் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். 


கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் கடந்த இரண்டு நாள்களாக அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல் வீசி மிக மோசமான சூழல் நிலவி வருகிறது. மைனஸ் 40 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு குளிர் வீசி வருவதால் பனிப்பொழிவு உச்சக்கட்டத்தை அடைந்து அமெரிக்காவின் பெரும்பான்மை பகுதிகள் முற்றிலுமாக நிலைகுலைந்துள்ளன.


மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் இந்தப் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பனிப்புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 31ஆக அதிகரித்துள்ளது.


கிறிஸ்துமஸ் ஈவ் தொடங்கி மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாத சூழல் நிலவி வரும் நிலையில்,  மேற்கு நியூயார்க்கில் உள்ள பஃபேலோ உள்ளிட்ட நகரங்களை பனிப்புயல் நிலை குலையச் செய்துள்ளது.


பஃபேலோ செல்வது போர் மண்டலத்துக்குச் செல்வது போல் உள்ளதாகவும் 8 அடி உயரத்துக்கு பனி வீசி சாலைகளை மூழ்கடித்துள்ளதாகவும் நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் முன்னதாகக் கவலை தெரிவித்துள்ளார். 


 






அதேபோல் அட்லாண்டா, சிகாகோ, டென்வர், டெட்ராய்ட் மற்றும் நியூயார்க் உட்பட கிறிஸ்துமஸ் நாள் முழுவதும் பல பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவித்தனர்.


பொதுவாக கிறிஸ்துமஸ் தினத்தில் சாலைகள் பரபரப்பாகக் காணப்படும் நிலையில், சாலைகளில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஓஹியோ மாகாணத்தில் பனிப்புயலால் தொடர்ந்து நிகழ்ந்த விபத்துகளில் 12 பேர் வரை உயிரிழந்ததாகத் தகவல்கள் வந்துள்ளன. வடக்கு கரோலினா, டென்னசி ஆகிய பகுதிகளில் மின் உபயோகத்தைக் குறைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், சாலைகளை பனி முற்றிலுமாக ஆக்கிரமித்த நிலையில் பேருந்து கவிழ்ந்து விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். 53 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


24ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஈவ் தொடங்கி சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரமின்றி சிக்கித் தவித்து வந்த சூழலில், தற்போது இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.


அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், டொரண்டோ - ஒட்டாவா இடையே பயணிகள் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.