பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெடாவில் பணிபுரிபவர் 28 வயதான ஆஸ்டின் வெல்ஸ். வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வரும் இவர், சொகுசு கப்பல் ஒன்றில் அடுக்குமாடி குடியிருப்பை குத்தகைக்கு எடுத்துள்ளார்.
தொலைதூரத்தில் இருந்தபடி பணி செய்து கொண்டே உலக முழுவதும் சுற்றுலா செல்வதற்காக அவர் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். பெரிய சொகுசு கப்பலான எம்வி நேரேட்டிவில் 500 தனி அறைகள் உள்ளது.
அந்த கப்பலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை 12 ஆண்டுகளுக்கு ஆஸ்டின் வெல்ஸ் குத்தகைக்கு எடுத்துள்ளார். இதுகுறித்து சிஎன்பிசி செய்தி நிறுவனத்திடம் ஆஸ்டின் வீடியோ கால் மூலம் பேட்டி அளித்துள்ளார்.
அதில், "தினசரி வாழ்க்கையை கவனித்து கொண்டே புதிய இடங்களுக்கு செல்வது உற்சாகமாக இருக்கும். என்னை மிகவும் உற்சாகப்படுத்தும் விஷயம் என்னவென்றால், உலகத்தைப் பார்க்க நான் எனது அன்றாட வழக்கத்தை இடையூறு செய்ய வேண்டியதில்லை.
எங்காவது வெளியே செல்ல வேண்டும் என்றால், பையை பேக் செய்து கொண்டு, விமானத்தில் ஏறி, அறையை வாடகைக்கு எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது.
ஆனால், தற்போது எனது அடுக்குமாடி குடியிருப்பு, எனது உடற்பயிற்சி கூடம், எனது மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், எனது மளிகைக் கடைகள் அனைத்தும் என்னுடன் உலகம் முழுவதும் சுற்றுகின்றன" என்றார்.
சொகுசு கப்பலின் அடுக்குமாடி குடியிருப்பை 12 ஆண்டுகளுக்கு 2.4 கோடி ரூபாய்க்கு அவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். மிக ஆடம்பரமான அந்த கப்பலில், 11 விதமான குடியிருப்புகள் உள்ளன.
இந்த கப்பல், 1,970 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. நான்கு படுக்கையறைகள், ஒரு உணவு உண்ணும் அறை, இரண்டு குளியலறைகள், ஒரு பால்கனி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
உலகம் முழுவதும் இந்த கப்பல் சுற்றி வரும் காலத்தில், குறைந்தது மூன்று வருடங்களாவது அங்கே வசிக்க ஆஸ்டின் திட்டமிட்டுள்ளார். ஜிம், ஸ்பா, மருத்துவச் சேவை, 24 மணி நேர ரூம் சர்வீஸ் ஆகியவற்றுடன் பணிபுரிவதற்கு என தனி அறையும் அவருக்கு வழங்கப்பட உள்ளது.
ஸ்டோரிலைன்ஸ் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த கப்பல் 2025 ஆண்டில் உலக பயணத்தை தொடங்க உள்ளது.