அமெரிக்க வான்வெளி பரப்பில் பறந்த மேலும் ஒரு அடையாளம் தெரியாத மர்மப்பொருளை, அந்நாட்டு விமானப்படை சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா எல்லைப்பகுதியில் உள்ள லேக் ஹுரான் பகுதியில் தான், இந்த மர்மப்பொருள் வானில் பறந்துள்ளது. இதையடுத்து, அதிபர் ஜோ பைடனின் உத்தரவின் பேரில், F-16 விமானத்தின் மூலம் அடையாளம் தெரியாத மர்மப்பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.


மர்மப்பொருள்:


எண்கோண அமைப்பில் பக்கவாட்டில் சரங்களைத் தொங்கவிட்டவாறு இருந்த அந்த பொருள், தரையிலுள்ள எதற்கும் ராணுவ அச்சுறுத்தலாகக் கருதப்படவில்லை. ஆனால் அது சுமார் 20,000 அடி உயரத்தில் பறந்ததால், விமானப் போக்குவரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்பதால், சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அரசு தரப்பு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அந்த பொருள் கண்காணிப்பு திறன்களைக் கொண்டுள்ளது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாவிட்டாலும்,  அதை நிராகரிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.


கனடா, அமெரிக்காவில் தொடரும் பதற்றம்:


முன்னதாக நேற்று கனடா வான்பரப்பில் அத்துமீறி பறந்த அடையாளம் தெரியாத மர்மப் பொருள், அமெரிக்க போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த மர்மப் பொருளின் பாகங்களை சேகரித்து அவற்றை ஆய்வு செய்யும் பணிகளை, கனடா மேற்கொண்டுள்ளது. அதோடு, கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் மீது 40 ஆயிரம் அடி உயரத்தில் ஏதோ மர்மப் பொருள் ஒன்று பறக்க அதனை அந்நாட்டு ராணுவம் ஜெட் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தியது. கடந்த 4ம் தேதியன்று அமெரிக்க வான்வெளி பரப்பில் பறந்த சீனாவின் ராட்ச பலூன் ஒன்றும் அமெரிக்க அரசால் சுட்டு வீழ்த்தப்பட்டது. F-22 ரேப்டர் ரக ஜெட் கொண்டு AIM-9X ஏவுகணை மூலம் அந்த பலூன் அழிக்கப்பட்டது. இதே ஜெட் விமானத்தையும், ஏவுகணையையும் கொண்டு தான் அலாஸ்காவில் பறந்த மர்மப் பொருளும் சுட்டு வீழ்த்தப்பட்டது.


தொடரும் குழப்பம்:


அமெரிக்கா மற்றும் கனடா வான்வெளி பரப்பில் கடந்த 2 வாரங்களில் நான்கு முறை அத்துமீறல்கள் நடைபெற்று உள்ளன. இதனால் அந்த பிராந்தியத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் பறந்த இந்த பொருட்கள் விமான ஓட்டி இல்லாமல் எப்படி பறந்தன? அவை எந்த நாட்டிற்கு சொந்தமானது? ஏலியன் விமானமா? எதற்காக பறந்தது? மக்களுக்கு இது ஆபத்து விளைவிக்குமா என்பது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. கடந்த 4ம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்ட ராட்சத பலூன் மட்டும் சீனாவிற்கு சொந்தமானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து சுட்டு வீழ்த்தப்பட்ட இந்த 3 பொருட்கள் எந்த நாட்டிற்கு சொந்தமானது, எதற்காக தொடர்ந்து அமெரிக்கா மற்றும் கனடா வான்பரப்பில் இந்த பொருட்கள் பறந்தன என்பது குறித்தும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.