உலக நாடுகள் அனைத்தும் தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து ஒரளவு மீண்டு வர தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில் வளர்ந்த நாடுகள் சில வளர்ந்து வரும் நாடுகளுக்கு தேவையான கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி வருகின்றன. உலக சுகாதார மையமும் இதற்காக 'கோவேக்ஸ்' என்ற திட்டத்தின் மூலம் பல உலக நாடுகளுக்கு தடுப்பூசி அளிக்க தொடங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு பல முக்கிய நாடுகள் உதவி அளித்து வருகின்றன.
அந்த வகையில் இன்று அமெரிக்கா தனது பங்களிப்பாக தங்களுடைய நாட்டிலிருந்து 80 மில்லியன் தடுப்பூசிகளை பிற உலக நாடுகளுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். இதில் 19 மில்லியன் உலக சுகாதார மையத்தின் திட்டம் மூலம் லத்தின் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு அளிக்க உள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகம் பாதித்துள்ள நாடுகளான இந்தியா,கனடா, மெக்சிகோ மற்றும் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடியாக 6 மில்லியன் தடுப்பூசியை அளிக்க திட்டமிட்டுள்ளது.
இந்தச் சூழலில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இன்று இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதில் இரு நாடுகளின் உறவு மற்றும் தடுப்பூசி தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்க துணை ஜனாதிபதி மெக்சிகோ அதிபர் உள்ளிட்ட சில நாடுகளின் தலைவர்களிடமும் பேசியுள்ளார். இது தொடர்பாக செய்தித் தொடர்பாளர் சைமோன் சாண்டர்ஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
அதில், "அமெரிக்காவின் தடுப்பூசி ஏற்றுமதி தொடர்பாக இந்த நாடுகளின் தலைவர்களிடம் பேசப்பட்டது. மேலும் 80 மில்லியன் தடுப்பூசிகளில் முதல் 25 மில்லியன் தடுப்பூசிகள் இந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதை அந்த நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். மேலும் இந்த இக்கட்டான சூழலில் பிற நாடுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: உளவு பார்த்த விவகாரம்: அமெரிக்க அதிபரிடம் விளக்கம் கேட்கும் ஜெர்மன், பிரெஞ்சு!