ஐரோப்பிய தலைவர்களை உளவு பார்த்த விவகாரம்: பைடனிடம் விளக்கம் கோரும் மெர்கல், மேக்ரோன்
ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களை உளவு பார்ப்பதற்கு டென்மார்க் அமெரிக்காவுக்கு நீண்ட காலமாக உதவிவருவதாக கடந்த ஞாயிறன்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இதுதொடர்பாக பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரோன், "ஐரோப்பிய நாடுகளை அமெரிக்கா உளவு பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஏற்புடையது அல்ல. அமெரிக்காவையும், அமெரிக்க மக்களையும் நம்பிக்கை என்ற உணர்வே இணைத்து வைத்திருக்கிறது. அதில் சந்தேகத்துக்கு எவ்வித இடமும் இருக்கக்கூடாது" எனத் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கூறுகையில், "நட்பு நாடுகளான டென்மார்க் மற்றும் அமெரிக்கா எல்லா விஷயங்களிலும் எங்களுடன் வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிப்பது நல்லது" என்று கூறியிருக்கிறார். காணொலி வாயிலாக மெர்கல், மேக்ரோன் ஸ்வீடன் பாதுகாப்பு அமைச்சர், நார்வே பிரதிநிதி எனப் பலரும் கலந்து கொண்ட சந்திப்பில் இந்தக் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஸ்வீடன் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் ஹூல்குவிஸ்ட் கூறும்போது, நட்புநாடுகளே உளவு பார்க்கின்றன என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் என்று வருத்தம் தெரிவித்தார். ஸ்வீடன், மற்றும் நார்வே நாடுகள் இவ்விவகாரத்தில் அமெரிக்காவும், டென்மார்க்கும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் மேலும் கூறுகையில், இந்த சம்பவம் நடந்து பத்து ஆண்டுகள் ஆகின்றன என்றாலும், இதன் வீச்சு மிகவும் கூர்ந்து கவனிக்கத்தக்கது என்றார்.
சர்ச்சையின் பின்னணி..
உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றான டென்மார்க் இணையதள வசதிக்காக கடலுக்கு அடியில் கேபிள்களை பதித்து, அதன் மூலம் இணைய சேவை பெற்று வருகிறது. ஸ்வீடன், நார்வே, ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுடனும் தகவல் பரிமாற்றத்தில் டென்மார்க் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையில் டென்மார்க் ராணுவ உளவு பிரிவினர் உள்நாட்டு புலனாய்வில் ஈடுபட்டனர். அப்போது, ஜெர்மனி நாட்டின்பிரதமர் ஏஞ்சலா மெர்கஸ் உள்பட ஐரோப்பிய நாட்டின் முக்கிய தலைவர்களை அமெரிக்க உளவு பார்த்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டென்மார்க் கேபிள் தடத்தின் வழியாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையினர் ஸ்வீடன், நார்வே, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் மூத்த அரசு அதிகாரிகளை உளவு பார்த்திருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் இந்த உளவு பார்க்கும் பணிகள் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை நடைபெற்று வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பைடனை நோக்கிப் பாய்வது ஏன்?
சரி, அமெரிக்கா உளவு பார்த்ததாக எழுந்த புகாரில் அத்தனைக் கைகளும் ஏன் குறிப்பிட்டு ஜோபைடனை நோக்கிப் பாய்கின்றன என்ற ஐயம் எழாமல் இருக்க இயலாது.
பைடன் துணை அதிபராக இருந்த காலகட்டத்திலேயே, இந்த உளவு பார்க்கும் விவகாரம் நடந்திருக்கிறது. இதனாலேயே பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன் நாடுகள் தற்போது அதிபர் பைடனுக்கு நெருக்கடி கொடுக்கின்றன. அந்த காலக்கட்டத்தில் தான் எட்வர்டு ஸ்னோடென் தேசிய பாதுகாப்பு முகமையில் ஒப்பந்த அடிப்படையில் பணியிலிருந்தார். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு அமெரிக்காவின் உளவு ரகசியங்கள் பலவற்றை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர். பிற நாடுகளின் அரசு செயல்பாடுகளையும், சொந்த நாட்டு மக்களையும் அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து ரகசியமாகக் கண்காணித்து வருவதை அவர் உலகுக்கு பகிரங்கப்படுத்தினார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பொழுது, பைடன் இதற்கு பதிலளிக்க தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் ஸ்னோடென் தற்போது ட்விட்டரில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.