இந்திய தேசிய கீதத்தை பாடிய அமெரிக்க பாடகி மேரி மில்பென் உணர்ச்சிவசப்பட்டு, பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணம்:


3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி கடந்த 20ம் தேதி அன்று இந்தியாவிலிருந்து அமெரிக்க புறப்பட்டுச் சென்றார். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றியது, அதிபர் பைடன் வெள்ளை மாளிகையில் அளித்த விருந்தில் பங்கேற்றது, தொழில் நிறுவன தலைவர்களை சந்தித்தது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.


தேசிய கிதம் பாடிய மேரி மில்பென்:


இந்த சுற்றுப்பயணத்தின் கடைசி நிகழ்ச்சியாக வாஷிங்டனில் உள்ள ரொனால்ட் ரீகன் கட்டடத்தில், இந்திய வம்சாவளியினரை சந்திக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. அதன் ஒருபகுதியாக அமெரிக்காவை சேர்ந்த 38 வயதான பாடகி மேரி மில்பென், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இந்திய தேசிய கீதத்தை பாடினார். தொடர்ந்து, மோடியின் காலில் விழுந்து மேரி ஆசியும் பெற்றார். 






மெல்பின் வீடியோ வைரல்:


இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான மேரி மெல்பின் ஏற்கனவே இந்தியர்களிடையே மிகவும் பிரபலமானவர்தான். குறிப்பாக இந்திய தேசிய கீதமான ஜன ஜன மன  மற்றும் ஓம் ஜெய் ஜெகதீஷ் ஆகிய பாடல்களை பாடி இந்தியாவில் பிரபலமானாவர். 


பெருமிதம் கொண்ட மெல்பின்:


இந்த நிகழ்ச்சி தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட மெல்பின் “தொடர்ந்து நான்கு அமெரிக்க அதிபர்களுக்காக அமெரிக்க தேசிய கீதம் மற்றும் தேசபக்தி பாடல்களை பாடிய நான், பிரதமர் மோடிக்காகவும்,  இந்திய தேசிய கீதத்தை பாடுவதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்” என குறிப்பிட்டு இருந்தார். 


நிகழ்ச்சியில் பேசிய மோடி:


நிகழ்ச்சியில் பேசிய மோடி “இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புறவானது 21 ஆம் நூற்றாண்டில் உலகையே சிறப்பாக மாற்றும். இந்த கூட்டாண்மையில் இந்திய வம்சாவளியினர் அனைவரும் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். நான் இங்கிருந்து நேராக விமான நிலையத்திற்குப் புறப்படுகிறேன், உங்கள் அனைவரையும் சந்திப்பது உணவுக்குப் பிறகு இனிப்புச் சாப்பிடுவது போன்றது” என பேசினார்.