அமெரிக்க சுற்றுப்பயணத்தின் கடைசி நாளில், பிரதமர் மோடி அடுத்தடுத்து பல முக்கிய நிகழ்சிகளில் கலந்துகொண்டார்.


தொழில் நிறுவன தலைவர்கள் உடன் ஆலோசனை:


3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி கடந்த 20ம் தேதி அன்று இந்தியாவிலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அதன் கடைசி நாளான நேற்று அந்நாட்டின் முக்கிய தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், தலைமை செயல் அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அதிபர் பைடன் உடன் சேர்ந்து பிரதமர் மோடியும் பங்கேற்றார். அதைதொடர்ந்து, அமேசான், கூகுள், போயிங் உள்ளிட்ட பெருநிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன், தனித்தனியே ஆலோசனை நடத்தி இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.


அரசு விருந்தில் பங்கேற்ற பிரதமர் மோடி:


தொடர்ந்து வாஷிங்டனில் அமெரிக்க அரசு சார்பில் வழங்கப்பட்ட பிரமாண்ட விருந்தில் மோடி பங்கேற்றார். அதில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், உள்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உள்ளிட்டோருடன், பல முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய மோடி “ 2014 ஆம் ஆண்டு நான் அமெரிக்கப் வந்திருந்தபோது, ​​அப்போது உள்துறை அமைச்சகத்தில் இருந்த அதிபர் பைடன், இந்தியா-அமெரிக்க நட்புறவு மிகவும் உயர்ந்தது என வரையறுத்தார். கடந்த 9 ஆண்டுகளில், பாதுகாப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் இருநாடுகளும் கூட்டாக அழகான பயணத்தை மேற்கொண்டுள்ளோம். குவாட் மற்றும் I2U2 ஆகியவற்றின் கட்டமைப்பில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டு முன்னேறி வருகிறோம்” என குறிப்பிட்டார்.’


இருநாடுகளின் உறவு தொடர்பான கூட்டம்:


தொடர்ந்து, அமெரிக்க உள்துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவுடனான நட்புறவு தொடர்பான கூட்டம் கென்னடி மையத்தில் நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி ”அமெரிக்க மற்றும் இந்தியா இடையேயான கூட்டாண்மை என்பது வசதிக்கானது மட்டுமல்ல. நம்பிக்கை, இரக்கம் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான பகிரப்பட்ட  அர்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலானது, அமெரிக்காவில் ஆட்சி மாறினாலும், இந்தியா உடனான நட்புறவு என்பது  தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது” என நம்பிக்கை தெரிவித்தார். பல முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் இந்தியா வம்சாவளியினர் இந்த கூட்டத்தில் பங்கேற்று மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


இந்தியா வம்சாவளியினர் இடையே உரை:


இறுதியாக வாஷிங்டனில் உள்ள ரொனால்ட் ரீகன் கட்டடத்தில் நூற்றுக்கணக்கான இந்தியா வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி உரையாறினார். அப்போது “இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புறவானது 21 ஆம் நூற்றாண்டில் உலகையே சிறப்பாக மாற்றும். இந்த கூட்டாண்மையில் இந்திய வம்சாவளியினர் அனைவரும் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். நான் இங்கிருந்து நேராக விமான நிலையத்திற்குப் புறப்படுகிறேன், உங்கள் அனைவரையும் சந்திப்பது உணவுக்குப் பிறகு இனிப்புச் சாப்பிடுவது போன்றது” என பேசினார்.


மோடி போட்ட டிவீட்:


இந்த பயணம் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில் “மிகவும் சிறப்பான அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொள்கிறேன். இங்கு இந்தியா-அமெரிக்கா நட்புறவுக்கு வேகம் சேர்க்கும் நோக்கத்தில் பல நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கில் நான் பங்கேற்றேன். வரவிருக்கும் தலைமுறைகளுக்கு நமது கிரகத்தை சிறந்த இடமாக மாற்ற நமது நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும்” என குறிப்பிட்டுள்ளார். அதோடு, அமெரிக்காவில் தான் பங்கேற்ற நிகழ்ச்சிகள் தொடர்பான காட்சிகளையும் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.


எகிப்து பயணம்:


அதைதொடர்ந்து, 3 நாள் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மோடி எகிப்து புறப்பட்டார். இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். குறிப்பாக, முதன்முறயாக எகிப்து பிரதமர் உடன் பிரதமர் மோடி வட்டமேசை ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.