H1-B விசாக்கள் உயர்திறன் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்தியில், குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்பதுறையை சேர்ந்த இளைஞர்களின் மத்தியில் பிரபலமான தேர்வாக உள்ளது. எந்தவித கூடுதல் கட்டுப்பாடுகளும் இன்றி,  அமெரிக்காவிற்கு சென்று தங்களது துறையில் பணியாற்றி திறமைக்கேற்ற நல்ல ஊதியம் பெற இந்த விசா முறை வழிவகுக்கிறது. உலக நாடுகளை சேர்ந்த பல தரப்பினரும் அமெரிக்கவிற்கு செல்ல H1-B விசாவை பயன்படுத்தினாலும், இதனை அதிகளவில் பயன்படுத்துவது இந்தியர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், H1-B உள்ளிட்ட விசாக்களின் கட்டணத்தை உயர்த்த, அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது, இந்திய இளைஞர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


H1-B விசா கட்டண உயர்வு: அரசின் முன்மொழிவு என்ன?


புதன்கிழமை வெளியிடப்பட்ட அரசின் முன்மொழிவின் கீழ், H1-B விசாவுக்கான விண்ணப்பம் அமெரிக்க டாலர் 460லிருந்து அமெரிக்க டாலர் 780 ஆக அதிகரிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில், H1-B விசா பெற விண்ணப்பதாரர்கள் இனி சுமார் ரூ.65,000 ஆயிரத்தை கட்டணமாக செலுத்த வேண்டும். H-1B விசா என்பது புலம்பெயர்ந்தோர் அல்லாத விசா ஆகும். இது அமெரிக்க நிறுவனங்களுக்கு கோட்பாட்டு அல்லது தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும் இடங்களில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், தொழில்நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக சிலிக்கான் பள்ளத்தாக்கைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனங்கள், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு அமர்த்துகின்றன. அவை பெரும்பாலும் இந்த வகை விசாக்களையே அனுமதிக்கின்றன.


மற்ற விசாக்களின் கட்டணமும் உயர்வு:


பருவகால மற்றும் விவசாய துறையை சேராத தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் H2-B விசாவிற்கான கட்டணமும் 460 டாலரிலிருந்து 1,080 டாலர்களாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில், புதிய கட்டணம் சுமார் ரூ.90,000 வரை செலுத்த வேண்டி இருக்கும். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தால் அமெரிக்காவிற்கு வெளியே பணியமர்த்தப்பட்ட நபர்களுக்கு L-1 விசா வழங்கப்படுகிறது.  இதற்காக வழங்கப்படும் எல்-1 விசாவிற்கான கட்டணம் 332 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதன்படி, புதிய கட்டணமாக சுமார் ரூ.1.15 லட்சம் செலுத்த வேண்டி இருக்கும்.


எப்போது புதிய கட்டணம் அமல்?


அமெரிக்க அரசின் புதிய கட்டணம் தொடர்பான பரிந்துரை பொதுமக்களின் கருத்துகளை பெற சமர்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான 60 நாட்கள் அவகாசம் வரும் மார்ச் 7ம் தேதி நிறைவடைய உள்ளதை தொடர்ந்து, அதன் பிறகு விசாக்களுக்கான புதிய கட்டண முறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கட்டண உயர்வு ஏன்:


கடந்த 2016ம் ஆண்டு முதல் விசாக்களுக்கான கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை எனவும், விசா வழங்கும் அமைப்பிற்கும் ஆகும் மொத்த செலவை மீட்டெடுக்க புதிய கட்டண முறை உதவும் எனவும், அந்நாட்டு உள்நாட்டு பாதுகாப்பு துறை விளக்கமளித்துள்ளது. அந்த அமைப்பிற்கான மொத்த வருவாயில் 96% விண்ணப்பதாரர்களின் கட்டணத்தில் இருந்து தான் பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.