இங்கிலாந்து அரசு குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஹாரி தனது குடும்பத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, அமெக்ரிகாவை சேர்ந்த கருப்பின நடிகையான மேகன் மார்க்லேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக அந்த தம்பதி, அரச குடும்பத்தில் இருந்து கடும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. பல்வேறு முறைகளில் மேகன் அரச குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிறம் சார்ந்தும் பல்வேறு விமர்சனங்களை மேகன் எதிர்கொண்டார். இதையடுத்து, இங்கிலாந்து அரசு குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக ஹாரி அறிவித்தார். இங்கிலாந்தில் இருந்து வெளியேறி மனைவி மேகன் உடன் கனடாவில் குடியேறினார்.
சர்ச்சையை ஏற்படுத்திய பேட்டிகள்:
இதையடுத்து தங்களது காதல் மற்றும் திருமண வாழ்வு குறித்து ஹாரி மற்றும் மேகன் அளித்த பல்வேறு பேட்டிகள், இங்கிலாந்து அரச குடும்பத்தில் பல்வேறு சர்சசைகளை ஏற்படுத்தியது. மேகன் கர்ப்பமாக இருந்தபோது, பிறக்கப்போகும் குழந்தையின் நிறம் எப்படி இருக்குமோ என அரச குடும்பத்தினர் கவலைப்பட்டனர். பிறக்கும் குழந்தைக்கு அரச குடும்ப பாதுகாப்பு வழங்கப்படாது, இளவரசர் பட்டம் சூட்டப்படாது என்றெல்லாம் அரண்மனை வட்டாரத்தில் பேசியதாக, அந்த தம்பதி தெரிவித்தது பெரும் பேசு பொருளானது.
ஹாரியின் சுயசரிதை புத்தகம்:
அண்மையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்தபோது, ஹாரி-மேகன் தம்பதி லண்டன் சென்று அஞ்சலி செலுத்தினர். இதனிடையே, 'Spare' எனும் பெயரில் இளவரசர் ஹாரி எழுதியுள்ள தனது சுயசரிதை புத்தகம், வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது. அதில், ஹாரி பல்வேறு ரகசியங்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுவதால், அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சூழலில், ஹாரியின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய நிகழ்வு தொடர்பான தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
”வில்லியம்ஸ் என்னை தாக்கினார்”
செய்தி தகவலின்படி, இளவரசர் வில்லியம் தன்னுடைய மனைவி மேகன் மேர்க்கெலை கொடுமையானவர், அகங்காரம் நிறைந்தவர், அழிவை ஏற்படுத்துபவர் என்று விமர்சித்தார். எல்லாம் மிக வேகமாக நடந்து முடிந்துவிட்டது. அவர் என்னுடைய சட்டை காலரை பிடித்து இழுத்து, எனது அணிகலனை உடைத்தார். என் கழுத்தை நெறித்து அடித்து கீழே தள்ளினார். அப்போது நான் நாய் சாப்பிடும் குடுவையின் மீது விழுந்ததில் அது உடைந்து குடுவையின் துண்டுகள் என் முதுகில் குத்தின. இந்த தாக்குதலால் என் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நேரம் தரையிலேயே கிடந்த நான், மீண்டும் எழுந்து வில்லியமை அங்கிருந்து வெளியே போகுமாறு கூறினேன்.
வில்லியம்ஸின் கோரிக்கை:
அங்கிருந்து வெளியேறும்போது, இங்கு நடந்த சம்பவம் குறித்து மேகனிற்கு நீ கூற வேண்டிய அவசியமில்லை என வில்லியம்ஸ் வலியுறுத்தியுள்ளார். நீ என்னை அடித்ததை பற்றியா என ஹாரி கேட்க, நான் உன்னை அடிக்கவே இல்லை என கூறிவிட்டு வில்லியம்ஸ் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இந்த தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த, 10ம் தேதி வெளியாக உள்ள ஹாரியின் சுயசரிதை புத்தகத்தில் மேலும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, தாக்குதல் சம்பவம் தொடர்பான தகவல் குறித்து, இளவரசர் வில்லியம்ஸ் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை.