தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது, மேத்யூஸ் க்ரூக்ஸ் என்னும் இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ட்ரம்ப் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.


அமெரிக்காவில் நவம்பர் மாதம் 47ஆவது அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தற்போது அதிபராக உள்ள ஜோ பைடனும், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிட உள்ளனர். இதற்காக இருவரும் பல்வேறு மாகாணங்களில் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதற்கிடையே பென்சில்வேனியா மாகாணத்தில் பரப்புரையில் ஈடுபட்ட ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அவரது காதில் மட்டுமே குண்டு உரசிச் சென்றது. இதனால் அவருக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து, அமெரிக்க பாதுகாப்பு படையினர் ட்ரம்ப்பைக் கொல்ல முயற்சித்த மேத்யூஸ் க்ரூக்ஸ் என்னும் இளைஞரைச் சுட்டு வீழ்த்தினர். அதி பாதுகாப்பு வாய்ந்த அமெரிக்க முன்னாள் அதிபரும் இப்போதைய அதிபர் வேட்பாளருமான ட்ரம்ப்பைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




அதிர்ச்சியளிக்கும் துப்பாக்கிக் கலாச்சாரம்


அமெரிக்காவையும் துப்பாக்கிச் சூட்டையும் பிரிக்கவே முடியாது. தனிமனித உரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகளில் முக்கியமானது அமெரிக்கா. இங்கு அந்தரங்க உரிமைகள், தனியுரிமைகள், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.


இந்த நிலையில் பொதுமக்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக சொந்தமாகத் துப்பாக்கிகளை வைத்துக்கொள்ள அனுமதியும் உரிமமும் வழங்கப்படுகிறது. இதற்கிடையே சக்திவாய்ந்த அமெரிக்க அதிபர்கள் பலர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


அமெரிக்காவில் வெவ்வேறு காலகட்டங்களில் 4 அதிபர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் ரிபப்ளிக் கட்சியைச் சேர்ந்த 3 அதிபர்களும் டொமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் பதவியில் இருக்கும்போதே கொல்லப்பட்டுள்ளனர்.


படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க அதிபர்கள் (Presidents assassinated)


ஆபிரஹாம் லிங்கன் (Abraham Lincoln)- 1865


ஜேம்ஸ் ஏ. கர்ஃபீல்ட் (James A. Garfield )- 1881


வில்லியம் மெக்கின்லி (William McKinley) - 1901  


ஜான் எஃப் கென்னடி (John F. Kennedy)- 1963




காயத்துடன் தப்பிய அதிபர்கள்


தியோடர் ரூஸ்வெல்ட் (Theodore Roosevelt) - 1912


ரொனால்ட் ரீகன் (Ronald Reagan) - 1981


டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) – 2024


இவர்கள் மூவருமே ரிபப்ளிக் கட்சியைச் சேர்ந்தவர்கள். இதில் தியோடர் ரூஸ்வெல்ட் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இருவரும் அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்கள். மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடும்போது பரப்புரையில் சுடப்பட்டு, காயத்துடன் உயிர் தப்பியவர்கள் ஆவர்.


அதேபோல, ஆண்ட்ரூ ஜாக்சன், ஆபிரஹாம் லிங்கன், வில்லியம் ஹாவர்ட் டஃப்ட், ஹெர்பெர்ட் ஹூவர், ஃப்ராங்க்ளிக் ரூஸ்வெல்ட், ஹாரி ட்ரூமேன், ஜான் கென்னடி, ரிச்சர்ட் நெக்ஸன், ஜெரால்ட் ஃபோர்டு, ஜிம்மி கார்ட்டர், ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ், பில் கிளிண்டன், , ஜார்ஜ் டபிள்யூ புஷ், பாரக் ஒபாமா ஆகிய அமெரிக்க அதிபர்கள் மீதும் தாக்குதல் முயற்சிகள் நடந்துள்ளன. அதேபோல, அதிபராக இருந்தபோது டொனால்ட் ட்ரம்ப் மீதும் ஜோ பைடன் மீதும் தாக்குதல் முயற்சிகள் நடந்த நிலையில், அவை முறியடிக்கப்பட்டன.


என்ன காரணம்?


அமெரிக்க அரசின் கொள்கைகளில் மாற்றம் தேவை என்பதே பெரும்பாலான துப்பாக்கிச் சூடுகளுக்குக் காரணமாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அனைத்துத் தாக்குகல்களுக்கும் அரசியல் காரணங்கள் மட்டுமே இருக்கவில்லை. தாக்குதலில் ஈடுபடும் சிலரின் மனநிலையில் பிரச்சினை இருந்துள்ளது. 


இதற்கிடையே அமெரிக்காவில் பரவலாகி இருக்கும் துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆங்காங்கே குரல்கள் எழுந்து வருகின்றன.