கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் தான் போட்டியிட்டிருந்தால் டிரம்பை வீழ்த்தி மீண்டும் வெற்றி பெற்றிருப்பேன் என தற்போதைய அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.


உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 5ஆம் தேதி பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸை வீழ்த்தி வெற்றி பெற்றார்.



மனம் திறந்து பேசிய பைடன்:


கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக ஜனநாயக கட்சியை விட குடியரசு கட்சி அதிக வாக்குகளை பெற்று சாதனை படைத்தது. முதலில் இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் போட்டியிட இருந்தார். ஆனால், பைடன் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டது.


அதோடு, வயது முதிர்வு அவருக்கு பெரும் பின்னடைவாக மாறியது. பல நேரங்களில் பைடன் சுய நினைவின்றி இருப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன. ஜனநாயக கட்சியினர் அழுத்தம் கொடுத்ததை தொடர்ந்து அவரும் போட்டியில் இருந்து விலகினார்.


பைடனை பாராட்டினாரா டிரம்ப்?


இருப்பினும், அதிபர் தேர்தலில் பைடனுக்கு பதிலாக போட்டியிட்ட கமலா ஹாரிஸ் தோல்வியை தழுவினார். வரும் 20ஆம் தேதி, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், தான் போட்டியிட்டிருந்தால் டிரம்பை வீழ்த்தி மீண்டும் வெற்றி பெற்றிருப்பேன் என பைடன் மனம் திறந்து பேசியுள்ளார்.


USA Today செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், "அதிபர் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் டிரம்பை வீழ்த்தி மீண்டும் வெற்றி பெற்றிருப்பேன். ஆனால், வெள்ளை மாளிகையில் நான்கு வருட காலம் பதவியில் தொடரும் அளவுக்கு வீரியம் பெற்றிருப்பேனா என்பது உறுதியாக தெரியவில்லை.


இதுவரை, நன்றாகவே இருக்கிறேன். ஆனால், எனக்கு 86 வயதாகும்போது நான் எப்படி இருப்பேன் என்று யாருக்குத் தெரியும்?" என்றார். டிரம்ப் உடனான சந்திப்பு குறித்து பேசிய அவர், "எனது பொருளாதார சாதனையைப் பற்றி டிரம்ப் பாராட்டினார். நான் ஒரு நல்ல சாதனையுடன் வெளியேறுவதாக அவர் [டிரம்ப்] கூறினார்" என்றார்.