2023ம் ஆண்டு ஜி20 தலைமை மாநாட்டை நடத்தும் பொறுப்பு இந்தாண்டு இந்தியாவிற்கு வழங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அதன்படி, சென்னை உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் ஜி20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 நாடுகளின் பிரதிநிகள் இந்தியாவிற்கு அடுத்த மாதம் முதல் வருகை தர இருக்கின்றனர். 


ஜோ பைடன்:


ஜி 20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7 முதல் 10 வரை இந்தியாவுக்கு வருகிறார். செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் அறிக்கையின்படி, கடந்த செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 22) வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இந்த தகவலை தெரிவித்தார்.


பைடனின் வருகையின் போது, ​​உலகளாவிய சவால்களை சமாளிப்பது, வறுமையை சிறப்பாக எதிர்த்துப் போராடுவது மற்றும் பலதரப்பு மேம்பாட்டு வங்கிகளின் திறனை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் தெரிவித்தார்.






என்ன விவாதிக்கப்படும்..?


உலகளாவிய பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஜோ பைடன் மற்றும் ஜி 20 நாடுகளில் பிரதிநிதிகள் கலந்துரையாடுவார்கள் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரின் ஜீன்-பியர் கூறினார். அதன்படி, காலநிலை மாற்றத்தை எதிர்த்தல் மற்றும் உக்ரைன் மோதலின் பொருளாதார மற்றும் சமூக விளைவுகளை சரிசெய்தல் ஆகியவை பற்றி கலந்துரையாட இருப்பதாக கூறப்படுகிறது.


பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்: 


ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க அரசுப் பயணத்தின் போது , ​​செப்டம்பர் மாதம் புதுதில்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளத் தயாராக இருப்பதாக அதிபர் பைடன் தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி ஜி-20 தலைவர் பதவியை ஏற்று நடத்தும் பொறுப்பை இந்தியா ஏற்றது. அதன்பிறகு பல்வேறு பிரச்னைகள் குறித்து பல கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.


பிரதமர் மோடி ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இந்த பயணமானது பல வழிகளில் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்தியாவில் ஜெட் என்ஜின், ட்ரோன் வாங்குதல், விண்வெளிப் பயணம் மற்றும் சிப் தயாரித்தல் தொடர்பான பல ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது.


இந்திய - அமெரிக்க உறவு: 


கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்க வெளியுறவுத்துறை உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, இந்தியா-அமெரிக்க உறவைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று கூறியிருந்தார். அதேபோல், கடந்த மே மாதம் ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பிற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனும் இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஜி20 மாநாட்டை இந்தியா நடத்த பொறுப்பை ஏற்றுகொண்டபோது, அமெரிக்கா APEC- Asia-Pacific Economic Cooperation (ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு) மாநாட்டை நடத்துகிறது. 21 நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாடானது வருகின்ற நவம்பர் 17 முதல் 17 வரை அமெரிக்காவில் நடைபெறுகிறது.