சுனாமி தாக்கியபோது பாதிக்கப்பட்ட அணு உலையின் கழிவு நீர் நாளை மறுநாள் கடலில் திறந்து விடப்படும் என ஜப்பான் பிரதமர் அறித்துள்ளார். 


2011ம் ஆண்டு ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டபோது, புகுஷிமாவில் இருந்த அணு உலை பாதிக்கப்பட்டது. உலகின் மிகவும் பாதுகாப்பான அணு உலை என கருதப்படும் புகுஷிமா அணு உலைக்குள் சுனாமியால் கடல் நீர் புகுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடல்நீரால் அணு உலைக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்ததால், அணு உலைகளை குளிர்விக்க முடியாத நிலை ஏற்பட்டது. 


மின்சாரம் தடை பட்டதால் அணு உலையில் இருந்த 6 யூனிட்கலில் 3 யூனிட்கள் சேதம் அடைந்து அந்த பகுதிக்குள் அணு கதிர்வீச்சு தாக்கியது. அணு உலை ஆபத்தான பகுதியாக மாறியதால், அதை முழுமையாக செயலிழக்க வைக்கும் முடிவை ஜப்பான் அரசு எடுத்தது. அதன்படி அணு உலையில் இருக்கும் கழிவுகளை அகற்றிவிட்டு அதை செயலிழக்க வைக்கும் பணியை டெப்கோ நிறுவனம் மேற்கொண்டது. 


சுமார் 10 லட்சம் மெட்ரிக் டன் கொண்ட அணு கழிவுகள் நிறைந்த நீரை ஆயிரக்கணக்கான தொட்டிகளில் சேகரித்து வைத்துள்ள ஜப்பான் அரசு, அவற்றை பாதுகாப்பாக சுத்திகரிக்கும் பணியிலும் ஈடுபட்டது. இப்படி 12 ஆண்டுகளாக சேகரித்து வைக்கப்பட்டு இருக்கும் அணு உலை கழிவுநீரை அப்புறப்படுத்த நினைத்த ஜப்பான் அரசு, அதை கடலில் வெளியேற்ற நீண்ட காலமாக முயன்று வருகிறது. அதன்படி கடந்த 2021ம் ஆண்டு அணு கழிவு நீர் பசுபிக் கடலில் வெளியேற்றப்படும் என ஜப்பான் அறிவித்திருந்தது. 


ஆனால் ஜப்பான் அரசின் இந்த விபரீத முடிவுக்கு அண்டை நாடான சீனாவும், உள்ளூர் மீனவர்களும், தென் கொரிய நாடும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அணு கழிவுநீரை கடலில் வெளியேற்றினால் ஜப்பான் உடனான உணவு ஏற்றுமதியை தடை செய்வோம் என ஐரோப்பிய நாடுகளும், சீனாவும் கடுமையாக எச்சரித்து இருந்தன. அணு கழிவுநீரை கடலில் கலந்தால் மீன்வளம் பாதிக்கடும் என்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்றும் உள்ளூர் மீனவர்களும் எச்சரித்து இருந்தனர். 


எனினும், அணு உலை கழிவுநீரை கடலில் விடும் திட்டத்தில் தீவிரம் காட்டி வரும் ஜப்பான் அரசு, உள்ளூர் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்படி அணு கழிவுநீர் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மீனவர்கள் தங்களின் தொழில்களை பராமரிக்கவும் 206 மில்லியன் டாலர் நிதியை ஜப்பான் அரசு ஒதுக்கீடு செய்தது. 


இதேபோல் அணு கழிவுநீரை வெளியேற்றுவதால் அருகில் உள்ள சீனா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு ஏற்படும் அணு கதிர்வீச்சு பாதிப்பு தொடர்பான ஆய்வையும் ஜப்பான் அரசு மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகளுக்கு பிறகு பூமிக்குள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் அமைத்து அதன் மூலம் அணு உலை கழிவு நீரை பசுபிக் கடலில் சேர்க்கும் பணியில் ஜப்பான் அரசு இறங்கியுள்ளது. 




இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் அணு உலை கழிவுநீரை கடலில் கலப்பதற்கு ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, நாளை மறுநாள் (24-08-2023) முதல் படிப்படிப்படியாக அணு உலை கழிவுநீர் கடலில் வெளியேற்றப்படும் என்றும், அமைச்சர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மெட்ரிக் டன் கணக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் கழிவுநீரை கடலில் கலக்க பல மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஜப்பானின் இந்த அதிரடி முடிவால் சீனாவும், தென்கொரிய நாடுகள் கடும் அதிருப்தியில் உள்ளன. ஜப்பான் அரசு திட்டமிட்டப்படி அணு கழிவு நீரை கடலில் வெளியேற்றினால், பசுபிக் கடலை ஒட்டிய சீனா மற்றும் கொரிய நாடுகளின் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், கடல் மீன்கள் மற்றும் நீரால் மனிதர்களுக்கு கதிரியக்க பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.