கொரோனா பாதித்த பல்வேறு உலகநாடுகளும் அமெரிக்கா பிரிட்டன் என வல்லரசு நாடுகளை தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யச் சொல்லிக் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது 800 லட்சம் தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்குத் தருவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதனை அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.இதில் 70 சதவிகிதத்துக்கும் மேல் ஐ.நா சபை ஒருங்கிணைத்திருக்கும் கோவாக்ஸ் தடுப்பூசி திட்டத்துக்குத் தரப்பட உள்ளது. மேலும் பேரிடரில் சிக்கி இருக்கும் இந்தியா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு மட்டும் சுமார் 60 லட்சம் தடுப்பூசிகள் தரப்படும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த வெள்ளை மாளிகையில் செய்தி அறிக்கையில், ‘அமெரிக்காவில் தடுப்பூசி தேவைக்கான குரல்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகின்றன. கிட்டத்தட்ட 63 சதவிகிதப் பெரியவர்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிட்டது.
இதற்கிடையே தடுப்பூசியின் சர்வதேச விநியோகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் கணக்கில் கொண்டு ஐக்கிய அமெரிக்க அரசு ஐ.நா சபையின் தடுப்பூசி திட்டம் மற்றும் இதர சர்வதேச நாடுகளுக்குத் தடுப்பூசிகளைப் பகிர உள்ளது. இதனடிப்படையில் முதல்கட்டமாக விநியோகம் செய்யப்படும் 250 லட்சம் தடுப்பூசிகளில் 190 லட்சம் தடுப்பூசிகள் ஐ.நா.சபையின் கோவாக்ஸ் தடுப்பூசி திட்டத்துக்கு அனுப்பப்படும். இதுவரை ஐ.நா சபை 760 லட்சம் தடுப்பூசிகளை தேவைப்படும் நாடுகளுக்குக் கொடுத்துள்ளது.
அமெரிக்க அரசு விநியோகிக்கவிருக்கும் இந்தத் தடுப்பூசிகளில் 60 லட்சம் மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கும், 70 லட்சம் தடுப்பூசிகள் ஆசிய நாடுகளுக்கும் 50 லட்சம் தடுப்பூசிகள் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட உள்ளன. மீதமுள்ள 60 லட்சம் தடுப்பூசிகள் வெள்ளை மாளிகையின் நட்புறவு நாடுகளுக்குத் தரப்பட உள்ளன.இந்த நட்புறவு நாடுகள் பட்டியலில் தென்கொரியா, மெக்சிகோ, பாலஸ்தீனிய காசா, இஸ்ரேல், எகிப்து, ஜோர்டான், ஹைத்தி ஆகிய பகுதிகள் அடக்கம்' என விவரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு இதில் எத்தனைத் தடுப்பூசிகள் கிடைக்கும்?
பேரிடரில் இருக்கும் நாடுகளுக்கு 60 லட்சம் தடுப்பூசிகள் தரப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இந்த நாடுகள் பட்டியலில் கொரியா, எகிப்து, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இருந்தாலும் இதில் இந்தியாவுக்கு எத்தனைத் தடுப்பூசிகள் கிடைக்கும் என்கிற விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. சர்வதேச நாடுகளிடமிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதில் இந்திய அரசு தொடர் இடர்களைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசிகளை விநியோகிக்க உள்ளது பற்றி கருத்து கூறியுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,’நாங்கள் தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்வது எந்தவித ஆதாயத்தையும் அணுகூலத்தையும் எதிர்பார்த்து அல்ல. தடுப்பூசிகளைப் பகிர்வது வழியாக உயிர்களைக் காப்பாற்றி இந்த சர்வதேசத் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணுகிறோம். இதற்கு எங்களது இந்த செயல்பாடு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என நம்புகிறோம்’ எனக் கூறியுள்ளார்.
தடுப்பூசி பற்றாக்குறை காரணமாகப் பல்வேறு உலக நாடுகளில் மூன்றாம் அலை கொரோனா பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read:கோவின் தளத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு - ராமதாஸ், சு.வெங்கடேசன் கண்டனம்