அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, போர்நிறுத்தம் அமலில் உள்ளது. ஆனாலும், ஈரான் மீது மீண்டும் தாக்குதலை தொடங்குவதற்கான ஆலோசனையில் ட்ரம்ப் ஈடுபட்டுள்ளார். இப்படிப்பட்ட சூழலில், ட்ரம்ப்பிற்கு கோபம் ஏற்படும் விதமாக, செறிவூட்டப்பட்ட யுரேனியம் குறித்து, ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி ஒரு முக்கிய உத்தரவை போட்டுள்ளார். அது என்ன உத்தரவு.? ட்ரம்ப் மீண்டும் தாக்குதலை தொடங்குவாரா.? விரிவாக பார்க்கலாம்.
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு முக்கிய காரணமான யுரேனியம்
அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை தாக்குவதற்கு முக்கிய காரணமே, அந்நாடு செறிவூட்டி வைத்திருக்கும் யுரேனியம் தான். அதை வைத்து ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் என்று கூறியே, அணு சக்தி ஒப்பந்தம் போட வேண்டும் என்று ட்ரம்ப் அழுத்தம் கொடுத்ததுடன், எச்சரிக்கைகளையும் விடுத்து வந்தார். ஆனால், ஈரான் அதை செய்யாமல், பதில் எச்சரிக்கைகளை விடுத்து ட்ரம்ப்பை சீண்டி வந்தது.
மறுபுறம், இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தர்கள் உதவியுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்தது. அந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்க தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையும் என்னவென்று பார்த்தால், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான். ஆனால், 3 சுற்று பேச்சுவார்த்தைகளிலும், ஈரான் அந்த கன்டிஷனை ஏற்கனவே இல்லை.
இதனால் கோபமடைந்துதான், இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்தார் ட்ரம்ப். மேலும், போர் ஒருபுறம் நடைபெற்ற நிலையிலேயே, பேச்சுவார்தையும் ஒரு பக்கம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாகவே, போரை 2 வாரங்கள் நிறுத்துவதாக ட்ரம்ப் முதலில் அறிவித்து, பின்னர் அதை தொடர்ந்து நீட்டித்து வந்தார். பின்னர், காலவரையின்றி போரை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
அதன் பின்னர், தற்போதும் அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பாக மொஜ்தபா போட்ட முக்கிய உத்தரவு
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் நடைபெற்றாலும், இப்போதும் ட்ரம்ப் பல எச்சரிக்கைகளை விடுத்துதான் வருகிறார். நேற்று கூட ஈரானுக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை அவர் விடுத்திருந்தார்.
மறுபுறம், ஈரானின் அணு ஆயுத கனவை தகர்க்கும் வகையில், அந்நாட்டின் மீது உடனடியாக தாக்குதலை தொடங்க வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தி வருகிறார். ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பேச்சுவார்த்தைக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் எனக் கூறி, ஏற்கனவே தகவல் வெளியானபடி, திட்டமிட்டிருந்த தாக்குதலையும் ஒத்தி வைத்துள்ளார்.
இப்படிப்பட்ட சூழலில், நாட்டின் ஆயுத தரத்தை மேம்படுத்தும் வகையில் செறிவூட்டி வைக்கப்பட்டுள்ள யுரேனியத்தை, வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது என ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த ஒப்பந்தம் செய்தாலும், யுரேனியத்தை மட்டும் துளி கூட நாட்டை விட்டு வெளியில் அனுப்ப முடியாது என்று அவர் கூறியுள்ளதால், மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
என்ன செய்வார் ட்ரம்ப்.?
மொஜ்தபாவின் இந்த உத்தரவு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிச்சயம் கோபப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே ஈரானுக்கு பல எச்சரிக்கைகளை அவர் விடுத்து வரும் நிலையில், ஒத்தி வைத்த தாக்குதல்களை உடனடியாக அவர் தொடங்கிவிடுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஏற்கனவே, அவர் விடுத்துவரும் எச்சரிக்கைகளால், கச்சா எண்ணெய் விலை எகிறி வருகிறது. இந்நிலையில், ட்ரம்ப் என்ன செய்யப் போகிறார் என்பதே தற்போது உலக நாடுகளின் கேள்வியாக உள்ளது.?
