அமெரிக்கா - ஈரான் இடையேயான போரில் தற்போது போர்நிறுத்தம் அமலில் உள்ளது. இந்த நிலையில், அமைதி ஒப்பந்தத்தை எட்ட ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அந்த பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அதில் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் தொடங்கப்படும் என்று கூறி, எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். அது குறித்து இப்போது பார்க்கலாம்.
ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை என்ன.?
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் உடனான மோதலை முடிவுக்கு கொண்டுவரும் ஒப்பந்தம் விரைவில் எட்டப்படலாம் என்று கூறினார். ஆனால், அதற்கு முன்பாக, ஒரு ஒப்பந்தத்ல் விரைவில் கையெழுத்திட வேண்டும், அவ்வாறு செய்யத் தவறினால், அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், ஈரான் கட்டாயமாக ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்றும், தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அதோடு, ஈரான் விவகாரத்தில் நாம் இறுதி கட்டத்தில் இருக்கிறோம் என்றும், இந்த நிலைமை முடிவடையலாம் அல்லது மேலும் மோசமடையலாம் என்றும் கூறியுள்ளார். மேலும், நாங்கள் சற்று விரும்பத்தகாத சில காரியங்களை செய்வோம், ஆனால் அப்படி நடக்காது என்று நம்புகிறேன் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், நாம் சென்று இந்த விவகாரத்தை முடித்து வைக்கப்போகிறோமா அல்லது அவர்கள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போகிறார்களா என்பதுதான் இங்கு உள்ள ஒரே கேள்வி என்று கூறிய ட்ரம்ப், என்ன நடக்கிறது என பார்ப்போம் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து, தனக்கு இதில் எந்த அவசரமும் இல்லை என்றும், அதிகமானோர் கொல்லப்படுவதை விட, குறைவானவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு, இந்த விவகாரத்தில், தான் சொல்வதைத் தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்வார் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
என்ன சொல்கிறது ஈரான் தரப்பு.?
மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில், மத்தியஸ்தரான பாகிஸ்தானிடமிருந்து பெற்ற அமெரிக்காவின் சமீபத்திய முன்மொழிவை தாங்கள் ஆராய்ந்து வருவதாக ஈரான் தரப்பில், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகெய் தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிப்பது, ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை முடிவுக்கு கொண்டுவருவது என ஈரானின் பல்வேறு கோரிக்கைகளை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ தங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், அது மத்திய கிழக்கு மோதலை விரிவுபடுத்தி, பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது.
முன்னதாக, ஈரான் ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், மீண்டும் தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையில், அமெரிக்கா, மத்திய கிழக்கு போரை மீண்டும் தொடங்க விரும்புவதாக, டெஹ்ரான் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கும் முகமது பாகர் காலிபாஃப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
