அமெரிக்காவின் அலாஸ்கா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. மேலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஜப்பான், ஹவாய் தீவுகள், பசுபிக் தீவு ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு அமைப்பான யு.எஸ். ஜியாலஜிக்கல் சர்வே ட்விட்டரில் தெரிவித்துள்ளது.




சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு, உயிர் சேதம் குறித்த எந்த செய்தியும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.


ஐஸ்லாந்தில் நிலநடுக்கம்


அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தில், அடிக்கடி நில அதிர்வுகளும், எரிமலை வெடிப்புகளும் ஏற்பட்டு மக்களை அச்சுறுத்துவது வழக்கம். இந்த நிலையில் தென்கிழக்கு பகுதியில் உள்ள தலைநகரான  ரெய்க்விக்கை பகுதியில் 24 மணி நேரத்தில் மட்டும், 2, 200 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதில், 7 நிலநடுக்கள் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகியுள்ளது என்பதையும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 


அடுத்தடுத்து தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதால் ரெய்க்விக்கை பகுதியில் இருக்கும் எரிமலை எப்பொழுது வேண்டுமானாலும் வெடித்து சிதறலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் மிகப்பெரிய எரிமலைகளை ஐஸ்லாந்தில் உள்ளன. கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐஸ்லாந்தின் ஹே ஜஃப்ஜல்லாஜோகுல் எரிமலை வெடித்ததில் ஐரோப்பா கண்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் உலகம் முழுவதும் பயணித்த ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் தவித்தனர். கொரோனா பரவல் இருந்த 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளிலும், ஐஸ்லாதில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 


2021ம் ஆண்டு ரேக்யூவீக் தீபகற்பத்தில் உள்ள ஃபேக்ரதால்ஸ்ஃப்யாட்ல் 800 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து. இது தவிர, அந்த ஆண்டில் மட்டும் சுமார் 40 ஆயிரம் நிலநடுக்கள் பதிவாகின. தற்போது ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் உணரப்பட்டதால், அது எரிமலை வெடிப்புக்கான சமிக்ஞைகளாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 



இதுவரை ஏற்பட்ட மோசமான நிலநடுக்கங்கள்


கடந்த மே 31ஆம் தேதி நியூசிலாந்தின் தெற்கு கடற்கரையில் உள்ள ஆக்லாந்து தீவுகளில் புதன்கிழமை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) சுட்டிக்காட்டியுள்ளது.


கடந்த மே 29ஆம் தேதி அசாம் மாநிலத்தில் உள்ள சோனித்பூரில் காலை 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய நில அதிர்வு மையத்தின் அறிக்கையின்படி, 15 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. 


கடந்த மே 28ஆம் தேதி ஆப்கானிஸ்தான் ஃபைசாபாத் பகுதியில்  காலை 11.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஃபைசாபத் பகுதியில் இருந்து 220 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் 5.2  என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. குறிப்பாக, கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 100 க்கும் அதிகமானோர் பலியாகினர். அதேபோல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.