அமெரிக்காவை சேர்ந்த டெய்லர் ஸ்விஃப்ட் எனும் பாடகியால் நாட்டின் பொருளாதரமே ஏற்றம் கண்டிருப்பதாக, பெடரல் வங்கியே விளக்கமளித்து இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


டெய்லட் ஸ்விஃப்ட்:


அமெரிக்காவை சேர்ந்த 33 வயதான பாடகி தான் டெய்லர் ஸ்விப்ட்.  பாப் பாடலாசிரியராகவும், பாடகியாகவும் பிரபலமான இவர், கிராமி விருதையும் வென்றுள்ளார்.  பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இவர், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இருந்த தனது டெய்லர் ஸ்விஃப்ட் எராஸ் டூர் எனும், இசை சுற்றுப்பயணத்தை அண்மையில் தொடங்கினார். 5 கண்டங்கள், 17 மாநிலங்களில் 131 இசைநிகழ்ச்சிகளை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். அவ்வாறு, டெய்லரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில், கொரோனாவ்ற்கு பிறகு முடங்கிய பொருளாதாரம் மீண்டு வருவதாக ஏற்கனவே பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


ஃபெடரல் வங்கி அறிக்கை:


அமெரிக்க பெடரல் ரிசர்வ் அமைப்பின் பீஜ் புத்தகம் எனப்படும் தற்போதைய பொருளாதார நிலைமைகள் பற்றிய அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது “ பிலடெல்பியாவில் டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை நிகழ்ச்சியை கண்டுகளிக்க குவிந்த சுற்றுலா பயணிகலால் அங்குள்ள ஓட்டல்களின் வருவாய் அதிகரித்துள்ளது. அப்பகுதியில் சுற்றுலா மூலமான வருவாய் ஒட்டுமொத்தமாக மந்தநிலையில் இருந்தபோதிலும், மே மாத ஓட்டல் வருவாயில் குறிப்பிடத்தக்க எழுச்சி ஏற்பட்டுள்ளது. அந்த நகரத்தில் நடைபெற்ற டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை நிகழ்ச்சியே இதற்கு காரணம். 


சிகாகோவில் புதிய சாதனை:


சிகாகோ நகரம் ஓட்டல் முன்பதிவுகளில் இதுவரை இல்லாத புதிய சாதனையை எட்டியுள்ளது. அதாவது, அங்கு நடைபெற்ற மூன்று நாள் இசை நிகழ்ச்சியின் போது  ஒவ்வொரு இரவும் 44,000 ஓட்டல் அறைகள் நிரம்பி வழிந்தன.  இதன் மூலம் ஜுன் மாதத்தில் ஓட்டல் முன்பதிவுகள் மூலம் மட்டும் 39 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயாக ஈட்டியுள்ளது. டெய்லர் ஸ்விஃப்ட் நிகழ்ச்சிகளுடன் வேறு சில முக்கிய நிகழ்ச்சிகளும், கடந்த ஜுன் மாதம் சிக்காகோவில் நடைபெற்றது இதற்கு காரணமாகியுள்ளது” என அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி தெரிவித்துள்ளது. போட்டிகளை காண வருவோரால் ஓட்டல் அறைகள் நிரம்பி வழிவதோடு, நிகழ்ச்சி நடைபெறும் மைதானங்களும் ரசிகர்களால் முழுமையாக நிரம்புகின்றன. இதனால், குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள உணவு உள்ளிட்ட மற்ற வியாபாரம், போக்குவரத்து உள்ளிட்ட பிற வணிகங்களும் வளர்ச்சியை கண்டு, பொருளாதார உயர்வில் பங்களிக்கின்றன.


நீளும் பட்டியல்:


டெய்லர் ஸ்விஃப்ட் தனது சுற்றுப்பயணத்தை பல்வேறு சர்வதேச இடங்களில் அறிவித்து, தனது சுற்றுப்பயணத்தை தொடர்ந்து நீட்டித்து வருவதால், அவரால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு இன்னும் அதிக உயரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளுடன் , டெய்லரின் சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 17, 2024 அன்று லண்டனில் முடிவடைய உள்ளது. 


1 பில்லியன் டாலர் இலக்கா?


தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்துவரும் ஸ்விப்ட், தற்போது சாதனை எண்ணிக்கையாக கருதப்படும் பில்லியன் டாலர் வசூலை எட்டக்கூடிய தூரத்தில் இருக்கிறார். கடந்த 2018-ம் ஆண்டில் எல்டன் ஜான் எனும் ஆங்கிலேயே பாடகர் ஃபேர்வெல் யெல்லோ ப்ரிக் ரோட் என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு,  910 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை படைத்தார். அதனை, 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக வசூலித்து,  டெய்லர் ஸ்விஃப்ட் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.