Trump H1B Visa: H1B விசாவிற்கான கட்டணத்தை அண்மையில் உயர்த்திய நிலையில், அது தொடர்பான நிலைப்பாட்டை தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மாற்றியுள்ளார்.
நிலைப்பாட்டை மென்மையாக்கிய ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது நிர்வாகத்தின் ஆக்ரோஷமான குடியேற்ற சீர்திருத்தங்கள் குறித்த நிலைப்பாட்டை மென்மையாக்கியதாகத் தெரிகிறது. அமெரிக்கா சில துறைகளுக்கு வெளிநாட்டு திறமையாளர்களைக் கொண்டுவர வேண்டும் என்று அவரே வலியுறுத்தியுள்ளார். நீண்டகாலமாக வேலையில்லாத அமெரிக்கர்களை பாதுகாப்பு போன்ற முக்கியமான துறைகளில் விரிவான பயிற்சி இல்லாமல் சிக்கலான பாத்திரங்களில் பணியமர்த்த முடியாது என்றும், அத்தகைய பாத்திரங்களை நிரப்ப அமெரிக்காவிற்கு திறமையான வெளிநாட்டினர் தேவை என்றும் ட்ரம்ப் பேசி இருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
”அமெரிக்காட்ட அவ்ளோ திறமை இல்லப்பா”
தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது, ட்ரம்பின் நிர்வாகம் H-1B விசாக்களை முன்னுரிமைப்படுத்த திட்டமிட்டுள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "நீங்கள் திறமையை கொண்டு வர வேண்டும்" என்று பதிலளித்தார். "எங்களிடம் (அமெரிக்கர்கள்) நிறைய திறமை இருக்கிறது" என்று தொகுப்பாளர் விவாதிக்க, "இல்லை, உங்களிடம் இல்லை" ட்ரம்ப் பேசியுள்ளார். மேலும், "உங்களிடம் குறிப்பிட்ட திறமைகள் இல்லை. வேலையின்மை கோட்டிலிருந்து மக்களை நீக்கிவிட்டு, நான் உங்களை ஒரு தொழிற்சாலையில் சேர்க்கப் போகிறேன். நாம் ஏவுகணைகளை உருவாக்கப் போகிறோம் என்று சொல்லாமுடியாது. மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று பதிலளித்தார்.
H-1B விசா திட்டத்தில் டிரம்பின் கடும் நடவடிக்கை
குடியேற்ற சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக, H-1B விசா திட்டத்தை ட்ரம்பின் நிர்வாகம் விமர்சித்த நிலையில், அவருடைய தற்போதைய கருத்துக்கள் வந்துள்ளன. செப்டம்பரில் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பால், புதிய H-1B விசா விண்ணப்பங்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சத்தை கட்டணமாக நிர்ணயித்தார்.
கடந்த வாரம், அமெரிக்க தொழிலாளர் துறை (DOL) H-1B விசா திட்டத்தில் சாத்தியமான துஷ்பிரயோகங்கள் குறித்து குறைந்தது 175 விசாரணைகளைத் தொடங்கியது. 'புராஜெக்ட் ஃபயர்வால்' என்று இந்த முயற்சி அழைக்கப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் உள்ள சிறப்பு பணிகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கும் விசா முறையை, சில நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதாக இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கே பாதிப்பு:
முன்னதாக ஒப்புதல்களில் பெரும் நிலுவை இருந்ததாலும், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான திறமையான குடியேறிகள் வந்ததாலும், 2024 ஆம் ஆண்டில் மொத்த அங்கீகரிக்கப்பட்ட H-1B விசாக்களில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமானவற்றால் இந்தியர்களே பலனைடைந்துள்ளனர். இந்நிலையில் விதிக்கப்பட்ட இந்த அதிகப்படியான கட்டணத்தால், அமெரிக்காவில் வேலை செய்ய வேண்டும் என்ற பல இந்தியர்களின் கனவு கேள்விக்குறியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், H1B விசா மீதான தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ள ட்ரம்ப், விரைவில் அதன் மீது விதிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தையும் குறைக்கக் கூடும் என நம்பப்படுகிறது.