தீவிரவாதத்துக்கு எதிரான தாக்குதல் என்ற பெயரில் ஈராக், ஆஃப்கானிஸ்தான், சிரியா என அந்நிய நாடுகளை ஆக்கிரமிப்பதற்கு போதையாகிக் கிடந்த அமெரிக்காவுக்குப் பேரிடியாக இருந்தது இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நடந்த அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதல். இரட்டை கோபுரம் என்றால் என்னவென்றே தெரியாத பல உலக நாட்டின் தொலைக்காட்சிகளிலும் இரண்டு பெரிய கோபுரங்கள் விமானம் கொண்டு தகர்க்கப்படும் காட்சி மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.  அதுவும் அமெரிக்காவின் விமானங்களைக் கடத்தியே அந்த நாட்டின் முக்கிய கட்டடங்களைத் தகர்த்தது ஒசாமா பின்லேடனின் பயங்கரவாத அமைப்பான அல் கொய்தா. 




பென்டகன் மாளிகை


எப்படி நடந்தது தாக்குதல்? 


அமெரிக்காவின் உள்நாட்டுப் போக்கு வரத்து விமானங்கள் நான்கினை நடுவானில் கடத்தினார்கள் அல்கொய்தாவினர். ஒவ்வொரு விமானத்திலும் விமானம் ஓட்டுபவர் உட்பட துப்பாக்கி ஏந்திய ஐந்து அல்கொய்தாவினர் இருந்தனர். முதல் தாக்குதல் உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரத்தின் வடக்குப் பகுதியில் நடந்தது. அடுத்த பதினைந்தாவது நிமிடம் கோபுரத்தின் தெற்குப் பகுதி வழியாக நடந்தது. இது நடந்த ஓரு மணிநேரத்திலேயே மொத்த கோபுரமும் தரைமட்டமானது.  இரண்டு விமானத்தாக்குதல் நடந்த அடுத்த அரை மணி நேரத்தில் அமெரிக்காவின் பெண்டகன் மாளிகையைத் தாக்கியது மூன்றாவது விமானம்.


நான்காவது விமானம் வெள்ளை மாளிகையைத் தாக்குவதாக இருந்த நிலையில் விமானத்தில் இருந்த பயணிகள் போராடி அதனை திசைதிருப்பி சமவெளிக்கு விமானத்தைத் திருப்பி மோதச் செய்தார்கள். நான்கு தாக்குதல்களிலும் ஒட்டுமொத்தமாக 2996 பேர் உயிரிழந்தனர். ஒசாமா பின் லேடனின் அல்கொய்தா அமைப்பு தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. பல்வேறு உலக நாடுகளில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்க எடுத்ததுதான் காரணம் எனத் தனது ஆடியோ டேப்பில் தாக்குதலுக்குக் காரணம் கூறியிருந்தார் லேடன். அந்தக் காரணங்களின் பட்டியலில் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா எடுத்த நிலைப்பாடும் அடக்கம். மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான போரில் தலையிட்ட அமெரிக்க ஈராக்குக்கான ஐ.நா.வின் சலுகைகளைத் திரும்பப்பெறும்படி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. அதையும் தனது காரணங்களில் குறிப்பிட்டிருந்தார் லேடன்.




புஷுக்கு தகவலைச் சொல்லும் ஆண்டி கார்ட்


புடினை அழைத்துப் பேசிய புஷ்


பள்ளி மாணவர்களிடையே நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷுக்குத் தாக்குதல் தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டது. புஷ்ஷின் தலைமை அதிகாரியான ஆண்டி கார்ட்தான் அவருக்கு முதன்முதலில் இந்தத் தகவலைத் தெரிவிக்கிறார். புஷ் அடுத்த சில நிமிடங்களில் பலருக்குத் தொலைபேசியில் அழைத்தார். அதில் ரஷ்ய அதிபர் புடினும் ஒருவர். அதுபற்றிக் கூறும் ஆண்டி கார்ட்,’ஏர் ஃபோர்ஸ் ஒன்’ தளத்திலிருந்து அவர் அழைத்து முதல் சில நபர்களில் புடினும் ஒருவர்.உங்களோடு போர் செய்ய இருக்கிறோம் என நீங்கள் யாரும் நினைக்க வேண்டாம். நான் முட்டாள்தனமாக எதுவும் செய்யவிரும்பவில்லை. பயங்கரவாதத்துக்கு எதிராக நாங்கள் வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்க உள்ளோம். அது உங்களது நேசநாடுகளுக்கு எதிரானது அதனால் அது உங்களையும் பாதிக்கும் என்பதை முன்னெச்சரிக்கை செய்கிறேன்’ எனக் புடினிடம் புஷ் கூறினார்’ என விவரிக்கிறார். இதையடுத்து ரஷ்யாவும் ஈராக் மீதான சலுகைகளை ஐ.நா. திரும்பப்பெற வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுத்தது.




11 செப்டம்பர் அமெரிக்க நேரம் இரவு 8:30 மணி


சரியாக இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றினார் அப்போதைய அதிபர் புஷ், ‘பயங்கரவாதிகள், பயங்கரவாதத்துக்குத் துணை செல்பவர்கள் என ஒருவரையும் நாம் விட்டுவைக்கப்போவதில்லை’ என சரியாக அன்றிரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களிடம் உறுதியேற்றார் புஷ். 




கலீத் ஷேக் முகமது


இந்த நான்கு தாக்குதல்களுக்கும் திட்டமிட்ட அல்கொய்தாவின் கலீத் ஷேக் முகமது அடுத்த ஒருவருடத்தில் பாகிஸ்தான் உளவுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு இன்றளவும் ராவல்பிந்தி நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. கலீத் கொடுத்த துப்பின் உதவியால்தான் பின்னர் அமெரிக்கப்படை லேடனைச் சுற்றிவளைத்ததாகவும் சொல்லப்படுகிறது.


அமெரிக்கா மீதான தாக்குதலை அனைத்து நாடுகளும் கண்டித்தபோது ஈராக்கின் சதாம் உசேன் மட்டும் தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைப்படையினரின் குடும்பத்துக்குப் பரிசுத்தொகையாக தலா 2000 டாலர்களை அறிவித்தார். 




சதாம் உசேன்


அடுத்த ஐந்தாண்டுகளில் உசேன் வேறு சில குற்றங்களுக்காகத் தூக்கிலேற்றப்பட்டார். 


இந்தத் தாக்குதலில் பின்னணியில் இருந்த பின்லேடன் என்னும் ஒற்றை நபரை வேட்டையாட பத்தாண்டுகள் எடுத்துக்கொண்டது அமெரிக்கப் படை. சரியாக மே 2011ல் ஆப்கானிஸ்தானில் நடந்த அமெரிக்கப்படைத் தாக்குதலில் லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 




ஈராக் மீதான அமெரிக்காவின் தாக்குதல், இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடு, என பல்வேறு காரணங்கள் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குக் காரணமாகக் கூறப்பட்டாலும் அமெரிக்காவின் அந்நிய ஆக்கிரமிப்புகள் சரியா? தவறா? என்னும் தர்க்கம் இன்றுவரைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதல் அமெரிக்காவுக்குப் பேரிழப்பு என்றாலும் சர்வதேசப் பொருளாதாரத்தையே அது ஆட்டம் காணச் செய்தது. அதுவரை 40 ரூபாய்களில் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்த அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மெல்ல மெல்லச் சரியத் தொடங்கியது வர்த்தக மையத் தாக்குதலுக்குப் பிறகுதான். இந்த இருபது ஆண்டுகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 73 என எக்குத்தப்பாக எகிறியிருக்கிறது.  ஒருபக்கம் சர்வதேச நாடுகள் இதனை பயங்கரவாதத் தாக்குதல் என்றாலும் மறுபக்கம் இது அமெரிக்க முதலாளித்துவமும் மத்திய கிழக்கு அடிப்படைவதாமும் மோதிக்கொண்டதற்கு அத்தனை மனித உயிரிழப்புகளும் தெரிந்தே கொடுக்கப்பட்ட விலை. 


’நம்மை அந்த மிருகங்களிடமிருந்து வேறுபடுத்துவது நாம் சந்தித்திராத இறந்த அத்தனைபேருக்குமாக நாம் சிந்தும் ஒரு துளி கண்ணீர்’ எனக் குறிப்பிட்டிருந்தார் அமெரிக்க எழுத்தாளர் ஒருவர். 


நாம் சந்தித்திராத அந்த முகங்கள் அத்தனையும் இன்றும் என்றும் நினைவில் ஏந்துவோம். 

Also Read: மறக்க முடியாத தாக்குதலும்.. வேறு கோணத்தில் பார்த்த கண்களும்.. இது வடுவின் வலி!