வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில், டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டின் இரவு விருந்துக்கு வெளிநாட்டு தலைவர்களை வரவேற்கும் வகையில் அச்சிடப்பட்டு அழைப்பிதழில் இந்தியாவுக்கு பதில் பாரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. 


இந்தியாவின் பெயர் மாற்றப்படுகிறதா?


எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் வைத்ததில் இருந்தே, இந்தியா என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் பாரத் என்ற வார்த்தையை பாஜக தலைவர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு ஏற்றார்போல், பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், "இந்தியா என்ற பெயரை சொல்லி அழைப்பதை தவிருங்கள். இந்தியாவிற்கு பதிலாக பாரதம் என்ற பெயரை மக்கள் பயன்படுத்த வேண்டும்" என வலியுறுத்தினார்.


இந்த சூழலில், இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது. ஆனால், மத்திய அரசு அதை மறுத்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவின் பெயரை 'பாரதம்' என மத்திய பாஜக அரசு மாற்றும்பட்சத்தில், இந்தியா என்ற பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கோரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


ஐ.நா. பதில்:


இந்தியா என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றி, ஐநா மட்டத்தில் அதற்கான அங்கீகாரத்தை வாங்கினால், அந்த பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கோரலாம் என பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


இந்த நிலையில், இந்தியாவின் பெயர் 'பாரதம்' என மாற்றும்பட்சத்தில், அதற்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு, ஐநா செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் பதில் அளித்துள்ளார்.


"தங்கள் பெயர்களை மாற்ற வேண்டும் என கோரிக்கை வரும் பட்சத்தில், ஐக்கிய நாடுகள் சபை அதை பரிசீலிக்கும். துர்க்கியே (துருக்கியின் புதிய பெயர்) விஷயத்தில், அரசாங்கத்தால் எங்களுக்கு வழங்கப்பட்ட முறையான கோரிக்கைக்கு நாங்கள் பதிலளித்தோம். வெளிப்படையாக, எங்களுக்கு இதுபோன்ற கோரிக்கைகள் வந்தால், அதை பரிசீலிப்போம்" என்றார்.


பழைய வரலாறு:


கடந்த 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி வரைவு விதி 1 அரசியலமைப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான விவாதத்தின் போது,  பாரத், ஹிந்துஸ்தான், ஹிந்த், பாரத்பூமி, பாரத்வர்ஷ் போன்ற பெயர்கள் முன்மொழியப்பட்டன. சில வரைவுக் குழு உறுப்பினர்கள் பாரதம் என்ற பெயரை தேர்வு வழிமொழிந்தனர். ஆனால், பெரும்பாலானோர் இந்தியா என்ற புதிய பெயரை விரும்பினர். இறுதியில் "இந்தியா, அதுவே பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என்ற அறிக்கைக்கு அரசியலமைப்புச் சபை ஒப்புதல் வழங்கியது.


சுதந்திரத்திற்குப் பிறகு நாடு பிளவுபட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் தலைவரான முகமது அலி ஜின்னா, நமது நாடு 'இந்தியா' என்ற பெயரை பயன்படுத்துவதை எதிர்த்தார். அவருடைய கூற்றின்படி,  'இந்தியா' என்பது முழு துணைக்கண்டத்தையும் உள்ளடக்கியது. அதாவது சிந்து சமவெளி உட்பட எல்லா பகுதியையும் உள்ளடக்கியதே இந்தியா. இண்டஸ் வேலி பகுதி முழுக்கவே இந்தியா. அதானால் இந்தியாவிற்கு இந்தியா என்று வைக்க கூடாது. 'இந்துஸ்தான்' என்ற பெயரை பயன்படுத்தலாம் என பரிந்துரைத்தார், ஆனால்  ஜின்னாவின் பரிந்துரையை நிராகரித்த நேரு நமது நாட்டிற்கு 'இந்தியா' என்று பெயரிட்டார்.