நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், கடந்த மாதம் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு, இந்த மாதம் 23ஆம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. 


நிலவில் லேண்டரை தரையிறக்கும் முயற்சியில் ஜப்பான்:


இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இணைய, தற்போது முனைப்பு காட்டி வருகிறது ஜப்பான்.


நிலவில் தரையிறக்க வேண்டிய லேண்டரை ஏந்தி செல்லும் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதில் தொடர் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், நான்காவது முயற்சியில் வெற்றி கண்டுள்ளது ஜப்பான். மோசமான வானிலை காரணமாக கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தன.


எல்லாம் திட்டமிட்டப்படி நடக்கும் பட்சத்தில், 'மூன் ஸ்னைப்பர்' என அழைக்கப்படும் ஜப்பான் அனுப்பிய லேண்டர் பிப்ரவரி மாதம் நிலவில் தரையிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, ஜப்பான் அனுப்பிய இரண்டு விண்கலன்களும் நிலவை அடையவில்லை. இதனால், ஜப்பானின் விண்வெளித் திட்டத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. 


பிப்ரவரி மாதம் சரித்திரம் படைக்குமா ஜப்பான்?


ஜப்பானிய விண்கலம், நிலவின் அருகில் உள்ள ஷியோலி பள்ளத்திற்கு அருகில் உள்ள இடத்தில் இருந்து 100மீ (328 அடி) தொலைவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, நான்கு மாதங்களுக்குள் நிலவின் சுற்றுப்பாதையில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரியில் தரையிறங்குவதற்கு, சந்திரனைச் சுற்றி ஒரு மாதம் வட்டமிடும்.


100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அனுப்பப்பட்டுள்ள விண்கலத்தில் எக்ஸ்-ரே இமேஜிங் மற்றும் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மிஷன் (XRISM) செயற்கைக்கோள் ஆகியவை அனுப்பப்பட்டுள்ளன. ஜப்பான், அமெரிக்க, ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய நாடுகள் இணைந்து XRISM செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.


பேருந்தின் அளவிலான (telescope) தொலைநோக்கியைக் கொண்ட செயற்கைக்கோள், பூமியைச் சுற்றி வரும் நோக்கில் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட லேண்டரில் இருந்து பிரிந்து சென்றுள்ளது. கருந்துளைகள் போன்ற விண்வெளி நிகழ்வுகளை, இந்த தொலைநோக்கி ஆய்வு செய்ய உள்ளது. ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) அதன் OMOTENASHI விண்கலத்துடனான தொடர்பை கடந்த நவம்பர் மாதம் இழந்தது. 


இதனால், நிலவில் தரையிறக்கும் முயற்சியை JAXA கைவிட்டது. மிக சமீபத்தில் ஏப்ரல் மாதம், ஒரு தனியார் ஜப்பானிய ஸ்டார்ட்-அப் நிறுவனம், iSpace, அதன் Hakuto-R லேண்டரை தரையிறக்க முடியாமல் தோல்வியை சந்தித்தது. அதுவும் விண்கலத்துடனான தொடர்பை இழந்தது.