திருமண நாள் என்பது அனைவருக்கும் ஸ்பெஷலான ஒன்று. டென்ஷன், மகிழ்ச்சி, சர்ப்ரைஸ் என அனைத்து விதமான எமோஷன்களிலும் நாம் சிக்கி திளைக்கும் நாளாக உள்ளது. வாழ்வின் முக்கியமான நாளை மன நிறைவுடன் செலவிடுவதற்காகவும் கடைசி நிமிடத்தில் ஏற்படும் டென்ஷன்களை குறைப்பதற்காகவும் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் அதிக நேரம் செலவழித்து முன்னேற்பாடுகளை செய்வது வழக்கம்.


சாலையில் சிக்கி தவித்த ஜோடி:


திருமண நாளுக்காக எவ்வளவு திட்டமிட்டு முன்னேற்பாடுகளை செய்தாலும் சில சமயங்களில் பின்னடைவுகள் ஏற்படதான் செய்கிறது. அதுபோன்ற ஒரு சம்பவம்தான், பிரிட்டனில் தம்பதியினர் ஒருவருக்கு நடந்துள்ளது. திருமணம் நடைபெறும் இடத்திற்குச் சென்று கொண்டிருந்த ஒரு ஜோடி, அவர்களின் வாகனம் பழுதடைந்ததால் சாலையில் சிக்கித் தவித்துள்ளனர்.


பரபரப்பான நேரத்தில், அந்த வழியாக வந்த காவல்துறையினர், ஜோடியை மீட்டு திருமணம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம், அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது ஹெட்ஜ் எண்ட் காவல்துறை.


திருமணத்தை மிஸ் செய்துவிடுவோமோ என கவலையில் இருந்த ஜோடி:


அதில், "ஹெட்ஜ் எண்டில் உள்ள செயின்ட் ஜான்ஸ் சாலையில் மனமக்களை ஏற்றி செல்லும் வாகனம் பழுதடைந்து நின்றது. நாங்கள், சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு சென்றோம். தங்களின் திருமணத்தை மிஸ் செய்து விடுவோமோ என மனமக்கள் கவலையில் இருந்ததை புரிந்து கொண்டோம்.


நாங்கள் அவர்களை போலீஸ் காரில் ஏறச் சொன்னோம், திருமணம் நடைபெறும் இடத்திற்கு ஸ்டைலாக லிப்ட் கொடுத்தோம். சில நிமிடங்களே மிஞ்சியுள்ள சூழலில், அங்கு சென்றுவிட்டோம். ஒன்றாக மகிழ்ச்சியான எதிர்காலத்தை வாழ அவர்களை வாழ்த்துகிறோம். ஜோடிக்கு உதவியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என காவல்துறை குறிப்பிட்டுள்ளனர்.


அழகான வெள்ளை திருமண கவுன்களை அணிந்திருந்த மணமக்களுடன் காவல் துறை அதிகாரிகள் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். இந்த பதிவு பதிவிடப்பட்டதில் இருந்து, ஆயிர்கணக்கானோர் இதை லைக் செய்துள்ளனர். பலர் கமெண்ட் செய்துள்ளனர்.


"நல்ல செயல், ரேச்சல் மற்றும் லூசி, தங்களின் பிஸியான நாளிலிருந்து நேரத்தை ஒதுக்கி, ஒரு அழகான செயலைச் செய்ய! என்ன ஒரு அற்புதமான திருமண நினைவு! மகிழ்ச்சியான தம்பதியருக்கு வாழ்த்துக்கள்" என ஒரு ட்விட்டர் பயனர் பதிவிட்டுள்ளார்.


 



"அதை விரும்புகிறேன்! தங்கள் நாளைக் காப்பாற்றி அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டனர். பல வழிகளில் ஹீரோக்களாக உள்ளனர்" என மற்றொரு ட்விட்டர் பயனர் குறிப்பிட்டுள்ளார்.