ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுலா மற்றும் பிற விசா கொண்டு பயணிப்பவர்கள் பாஸ்போர்ட்டில் முதல் பெயரை மட்டும் குறிப்பிட்டிருந்தால் அவர்கள் நாட்டிற்குள் வரவும் நாட்டை விட்டு வெளியேறவும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பான தகவலை ஐக்கிய அரபு அமீரகத்தின் உயர்மட்ட அதிகாரிகள், இண்டிகோ விமான நிறுவனத்திடம் பகிர்ந்துள்ளனர். எனவே, பாஸ்போர்ட்டில் முதல் பெயரையும் இரண்டாவது பெயரையும் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.


இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி, நவம்பர் 21, 2022 முதல், சுற்றுலா, வருகை அல்லது வேறு எந்த வகையான விசாவில் பயணிப்பவர்களும், பாஸ்போர்டில் ஒரே பெயரைக் கொண்டிருந்தால் நாட்டுக்குள்ளேயும் வெளியே செல்லவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


இருப்பினும், பாஸ்போர்ட்டில் ஒற்றை பெயரைக் கொண்ட பயணிகள், குடியிருப்பு அனுமதி அல்லது பெர்மமென்ட் விசா வைத்திருந்து, அங்கு குறிப்பிடப்பட்டுள்ள அதே பெயரை "முதல் பெயர்" மற்றும் "குடும்பப்பெயர்" நெடுவரிசையில் புதுப்பித்திருந்தால் அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தெரிவித்தனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், விவரங்களுக்கு, தங்கள் கணக்கு மேலாளரைத் தொடர்புகொள்ளலாம். அல்லது goindigo.com என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும் என விமான நிறுவனம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.


 






ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற பிற விமான சேவை நிறுவனங்கள், ஐக்கிய அரபு அமீரக பயணிகளின் பாஸ்போர்ட்டில் அவர்களின் முதன்மை (முதல் பெயர்) மற்றும் இரண்டாம் நிலை (குடும்பப்பெயர் / கடைசி பெயர்) ஆகிய இரண்டும் இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


பல விமான நிறுவனங்கள் புதிய வழிமுறைகளை அமல்படுத்திய பிறகு, பாஸ்போர்ட்டில் குடும்பப்பெயர் இல்லாத பல இந்திய குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.


புதிய விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, பயண முகவர்கள், விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு முன் அல்லது தற்போதுள்ள ஆவணங்களில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் கூடுதல் தகவலுக்காக காத்திருக்குமாறு மக்களைக் கேட்டு கொண்டுள்ளனர்.