மலேசிய எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம் இன்று பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை மன்னர் மாளிகை வெளியிட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு அவர் பிரதமராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த நவம்பர் 19ஆம் தேதி, மலேசியாவில் நடைபெற்ற பொது தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இரு முக்கிய கூட்டணிக்கும் கிடைக்காததால் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தது. 


இதை தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அன்வார் இப்ராகிம் தலைமையிலான கூட்டணியும் முன்னாள் பிரதமர் முஹ்யித்தீன் யாசின் கூட்டணியும் முயற்சி மேற்கொண்டது. 


30 ஆண்டு கால அரசியல் வாழ்க்கைக்கு சொந்தகாரர் அன்வார் இப்ராகிம். முன்னாள் துணை பிரதமரான இப்ராகிம், கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலமாக எதிர்கட்சி தலைவராக செயல்பட்டார். பல முறை ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளார்.


 






பக்காத்தான் ராக்யாட் கட்சியின் தலைவராக இப்ராகிம் பொறுப்பு வகித்தபோது, கடந்த 2008ஆம் ஆண்டு, தன்னுடைய ஆண் உதவியாளரை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியதாகக் கூறி அவர் சிறையில் அடைக்கப்பட்டார. ஆனால், 2012ஆம் ஆண்டு அவர் குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. 


அதில், குற்றம் செய்தது நிரூபணம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு, அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. அரசியல் வாழ்க்கையில் பிரதமராகும் வாய்ப்பு அவருக்கு பல முறை கிடைத்தபோதிலும், அவற்றை மயிரிழையில் அவர் தவறவிட்டார். 1990களில் துணை பிரதமராக பொறுப்பு வகித்தார். 


நாட்டின் ஆட்சியாளர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து, மலேசிய அரசியலமைப்பின்படி, தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவின் பத்தாவது பிரதமராக அன்வாரை மன்னர் நியமித்தார்.


இதுகுறித்து மன்னர் பேசுகையில், "நீங்கள் தேர்தலில் தோற்றாலும் வெற்றி பெற்றாலும், எங்கள் அன்புக்குரிய நாட்டிற்காக நீங்கள் துணை நிற்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நாட்டிற்கு வலுவான மற்றும் நிலையான அரசாங்கம் தேவைப்படுவதால், நமது தேசத்தின் கொள்கை ஸ்திரமின்மை இல்லாமல் இருப்பது முக்கியம்" என்றார்.


தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை தேசத்திற்கு தொடர்ந்து சிறப்பாகச் சேவை செய்யுமாறு கேட்டுக் கொண்ட அவர், நெருக்கடியைத் தீர்ப்பதற்காக உதவிகளை வழங்கி நுண்ணறிவை பகிர்ந்து கொண்டதற்கு நாட்டின் ஆட்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.