உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு வரும் ரஷ்ய வீரர்களின் தாய்மார்கள் மட்டும் அவர்களின் மகன்களை அழைத்துச்செல்லலாம் என ஒரு ஃபேஸ்புக் பதிவை போட்டிருக்கிறது உக்ரைன் ராணுவம். உக்ரைன் எல்லைக்கு வந்து உக்ரைனில் இருந்து உயிருடன் திரும்பு என்று பெயரிடப்பட்ட மையத்தின் தொலைபேசி எண்களுக்கு அழைக்கும் அம்மாக்களின் மகன்களை அனுப்பி வைப்பதாக உக்ரைனிய ராணுவம் தெரிவித்துள்ளது



அம்மா எனக்கு பயமாக இருக்கிறது.. என்று இறப்புக்கு முன்னர் ரஷ்ய வீரர் தன்னுடைய தாய்க்கு அனுப்பிய செய்தி தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உக்ரைன் நாட்டில் இன்றுடன் 8 நாட்களாக ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் ஆகியவற்றில் ரஷ்ய படைகள் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. மேலும் பல முக்கிய நகரங்களில் அவ்வப்போது தொடர்ந்து குண்டுகள் விழும் சத்தமும் கேட்டு வருகிறது. பல இடங்களில் சேதமும் ஏற்பட்டுள்ளது. 


அங்கு 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தாக்குதல் காரணமாக உக்ரைன் நாட்டின் வான்வெளியில் விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 


இந்திய மத்திய அரசு ஏர் இந்தியா விமானங்களை அனுப்பி, இந்திய மாணவர்களை மீட்க முயற்சி செய்து வருகிறது. அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் போலந்து மற்றும் ருமேனியா உள்ளிட்ட நாடுகள் மூலமாக இந்தியா மீட்கப்பட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், கார்கிவ் நகரில் நடைபெற்ற தாக்குதலில் சிக்கிய இந்திய மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த மாணவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்பது தெரியவந்துள்ளது. நேற்று சந்தன் ஜிண்டால் என்ற மாணவர் சிகிச்சை பெறமுடியாமல் ஸ்ட்ரோக் காரணமாக உயிரிழந்தார்.


முன்னதாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிட் செலென்ஸ்கி ரஷ்ய ராணுவத்தினர் ஆயுதங்களைக் கைவிட்டு, நாடு திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்து இரு நாட்டுத் தரப்புகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 




மேலும், உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட விரும்புவோரும், ராணுவப் பயிற்சி பெற்ற சிறைவாசிகளும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவர் என்றும் அறிவித்துள்ளார். 


உக்ரைன் அதிபர் அலுவலகத்தில் இருந்து வெளியான தகவல்களின் அடிப்படையில், பெலாரஸ் நாட்டின் எல்லையில் ரஷ்யாவின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 


இந்த நிலையில், உக்ரைன் போர் குறித்து திங்களன்று ஐக்கிய நாடுகள் சபையில் அவசர பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உக்ரைனுக்கான ஐ.நா. தூதுவர், ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர் தான் இறப்பதற்கு முன்னர் தாயிடம் உரையாடிய உரையாடல்களை வாசித்துக் காட்டினார். அதை மொழிபெயர்ப்பாளர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 


அந்த வீடியோவில், ரஷ்ய வீரரின் தாய் அவரிடம் கேட்கிறார். ''ஏன் இத்தனை நாட்களாய் என்னைத் தொடர்புகொள்ளவில்லை? உனக்கு ஏதேனும் பொருளை அனுப்பட்டுமா?'' என்கிறார். அதற்கு பதிலளிக்கும் வீரர், ''அம்மா என்ன பொருளை அனுப்புகிறீர்கள்? நான் உக்ரைனில் இருக்கிறேன். இங்குள்ள மக்கள் எங்களை வரவேற்பார்கள் என்று எங்களிடம் சொல்லப்பட்டது. ஆனால், இங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை''. 


''ஆயுதங்கள் தாங்கிய வண்டிகளின்மீது உக்ரைன் மக்கள் விழுகின்றனர். எங்களை உள்ளே செல்ல அனுமதிக்க மறுக்கின்றனர். எங்களை ஃபாசிஸ்டுகள் என்று அழைக்கின்றனர். இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இங்கு உண்மையான போர்தான் நடக்கிறது. 


அம்மா எனக்கு பயமாக இருக்கிறது. எல்லா நகரங்களின் மீதும் நாங்கள் குண்டு வீசுகிறோம். பொதுமக்களைக் கூட குறிவைக்கிறோம்'' என்று ரஷ்ய வீரர் தெரிவித்துள்ளார். 






இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.