ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் அவசரத்தில் காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்துக்கு இடையே தொலைந்து போன குழந்தை பல மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. 2001ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வந்த தாலிபான்கள், அமெரிக்க படையினரின் வெளியேற்றத்தை தொடர்ந்து வெகு விரைவாகவே பல்வேறு மாகாணங்களை கைப்பற்றிய நிலையில், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியன்று தலைநகர் காபுலையும் கைப்பற்றி அஷ்ரப் கனி தலைமையிலான அரசை தூக்கி எறிந்தனர். மேலும் அஷ்ரப் கனி நாட்டை விட்டே வெளியேறினார். ஆப்கானிஸ்தானில் தற்போது புதிய ஆட்சியை நிறுவியுள்ள தாலிபான்கள், ஹசன் அகுந்த் என்பவரை பிரதமராக அறிவித்து புதிய அமைச்சரவையை உருவாக்கியுள்ளனர். அப்போது நிகழ்ந்த பரபரப்பான பல சம்பவங்களில் அதிகம் பேசப்பட்டது ஒரு இரண்டு மாத குழந்தை காணாமல் போனதுதான். 35 வயதான மிர்சா அலி, 32 வயதாகும் சுரயா, மற்றும் அவர்களது 17, 9, 6 மற்றும் 3 வயது கொண்ட பிற குழந்தைகள், கத்தாருக்கும் பின்னர் ஜெர்மனிக்கும் ஒரு வெளியேற்ற விமானத்தில் இருந்து இறுதியில் அமெரிக்காவில் தரையிறக்கப்பட்டனர். குடும்பம் இப்போது டெக்சாஸில் உள்ள ஃபோர்ட் பிளிஸ்ஸில் மற்ற ஆப்கானிய அகதிகளுடன் அமெரிக்காவில் எங்காவது குடியேற காத்திருக்கிறது. மற்ற குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை காபூல் விமான நிலைய ராணுவ வீரர்களிடம் ஒப்படைப்பதை தான் பார்த்ததாக மிர்சா அலி அப்போதே கூறியிருந்தார்.



அவர்களது இரண்டு மாத குழந்தை சோஹைல் கடும் கூட்ட நெரிசலில் நசுங்கி விடுமோ என்ற அச்சத்தில், அவர்கள் விரைவில் 16 அடி (5 மீட்டர்) தொலைவில் உள்ள நுழைவாயிலுக்குச் சென்றுவிடலாம் என்று நினைத்து அவரை ஒரு ராணுவ வீரரிடம் ஒப்படைத்தனர். விமான நிலைய வேலியின் மறுபக்கத்திற்குச் செல்ல குடும்பத்தின் மற்றவர்களுக்கு அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆனது. அவர்கள் உள்ளே சென்றதும் சோஹைலைக் காணவில்லை. 10 வருடங்கள் அமெரிக்க தூதரகத்தில் பாதுகாவலராகப் பணிபுரிந்ததாகக் கூறிய மிர்சா அலி, அவர் சந்திக்கும் ஒவ்வொரு அதிகாரியிடமும் தனது குழந்தை இருக்கும் இடத்தைப் பற்றி தீவிரமாகக் விசாரிக்க தொடங்கினார். குழந்தைகளுக்கு விமான நிலையம் மிகவும் ஆபத்தானது என கருதி அந்த ராணுவ வீரர் குழந்தைகளுக்கான சிறப்புப் பகுதிக்கு அழைத்துச் சென்றிருப்பார் என்றும் இராணுவத் தளபதி தன்னிடம் கூறியதாக அவர் கூறினார். ஆனால் அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது அங்கு யாருமே இல்லை கூறினார். விமான நிலையம் முழுவதும் தேடியும் அந்த குழந்தை அப்போது அவர்களுக்கு கிடைக்கவில்லை.



அந்த குழந்தையை காபூல் நகரைச் சேர்ந்த ஹமீத் சஃபி என்ற டாக்சி ஓட்டுநர் தனது வீட்டுக்கு கொண்டு சென்று பராமரித்து வந்திருக்கிறார். கடந்த நவம்பரில் குழந்தையின் புகைப்படத்துடன் ராய்ட்ர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்ட பிறகு அவரிடம் குழந்தை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக ஏழு வாரங்களுக்கும் மேலாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இறுதியாக குழந்தையை காபூலில் இருக்கும் தாத்தா உள்ளிட்ட பிற உறவினர்களிடம் ஒப்படைத்தார் சஃபி. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் குழந்தையின் பெற்றோர், தங்களிடம் குழந்தையைச் சேர்க்கும்படி கேட்டுக் கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர்களால், நான்கு மாதங்களாகியும் தொலைந்துபோன குழந்தை எங்கே என்ற விவரம் தெரியவில்லை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தூதரகம் மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் செயல்படாததால் குழந்தையைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியவில்லை. அஹமதி குடும்பத்தினரும் குழந்தையும் பிரிந்த அதே நாளில் தனது சகோதரரின் குடும்பத்தை விமான நிலையத்தில் விடுவதற்காக வந்திருந்தார் டாக்சி ஓட்டுநர் சஃபி. குழந்தை ஒன்று தரையில் அழுதபடி கிடப்பதைப் பார்த்திருக்கிறார்.



குழந்தையின் பெற்றோரைத் தேடியதாகவும், யாரையும் கண்டுபிடிக்க முடியாததால், குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்ததாகவும் சஃபி கூறுகிறார். தாய், மனைவி, மூன்று பெண் குழந்தைகளுடன் வசிக்கும் சஃபிக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பது அவரது அம்மாவின் விருப்பமாம். அதனால் குழந்தையை தாங்களே வளர்க்கலாம், குழந்தையின் குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களிடம் ஒப்படைக்கலாம் என அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். குழந்தையின் புகைப்படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து, சஃபியின் அண்டை வீட்டுக்காரர்கள் அவர் விமான நிலையத்தில் இருந்து குழந்தையுடன் வந்தது பற்றி நினைவுகூர்ந்திருக்கிறார்கள். இதன் பிறகே குழந்தையின் இருப்பிடம் பற்றித் தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் தாத்தா ரஸாவி சஃபியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். ஆயினும் குழந்தையைத் தர சஃபி விரும்பவில்லை. இறுதியில் சஃபி மீது தாலிபன் காவல்துறையிடம் கடத்தல் புகார் அளித்தார் ரஸாவி. இந்தப் புகாரை மறுத்த சஃபி, குழந்தையைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். இறுதியில் குழந்தையை 5 மாதங்களாகப் பராமரித்ததற்காக 950 அமெரிக்க டாலர் பணம் கொடுப்பது என்று உடன்பாட்டை ஏற்றுக் கொண்டு குழந்தையை ஒப்படைக்க சஃபி சம்மதித்தார். தற்போது குழந்தை அவரது தாத்தாவிடம் இருக்கிறது. குழந்தையை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அஹமதி தம்பதியினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.