உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி ரஷ்யப் படையெடுப்பை எதிர்கொள்ள மக்களின் கைகளில் துப்பாக்கிகள் கொடுக்கப்படும் எனக் கூறியது கடந்த வாரம் முழுவதும் பேசுபொருளாக இருந்தது. தொடர்ந்து, உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி ரஷ்யப் படையினருக்கு எதிராகப் போரிட விரும்பும் சிறைவாசிகளுக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும் எனக் கூறியிருந்ததோடு, அதனை அமல்படுத்தி இருந்தார். எனினும், அது உக்ரைன் நாட்டிற்கு நன்மை விளைவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிகளவில் தீமை விளைவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


ரஷ்யப் படையினரை எதிர்த்து போரிட விரும்பிய சிறைவாசிகளுக்கு விடுதலை அளிக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் கையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், ஒரு நபர் இந்தத் திட்டம் ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனில் மிகப் பெரிய ஆபத்தை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார். தன்னை செல்ஃபி வீடியோ ஒன்றை எடுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்த நபர், `இங்கு நிலைமை கை மீறி போய்க் கொண்டிருக்கிறது. ஏனெனில் அனைவரின் கையிலும் ராணுவ ஆயுதங்கள் இருக்கின்றன. உக்ரைன் தலைநகர் கீவில் பாலியல் வன்கொடுமை, கொலைகள், கொள்ளைகள், குழு மோதல்கள் முதலானவை தற்போது அதிகரித்துள்ளன’ எனக் கூறியுள்ளார். 



இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள அந்த நபர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். எனினும், பல நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள ரஷ்ய அதிபர் புடின் ஆதரவாளர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும் சிலர் மற்றொரு வீடியோவைப் பகிர்ந்து, இந்த வீடியோவில் இடம்பெற்றிருப்பவர் அவ்வாறு கூறவில்லை எனவும், ரஷ்ய அரசின் ஆதரவாளர்கள் வீடியோ பதிவிட்ட நபரின் வார்த்தைகளை மாற்றுவதாகவும் பதிவிட்டு வருகின்றனர். 


எனினும், ஆயுதங்களை வைத்திருக்கும் இந்த நபர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவர்களால் உக்ரைன் அரசை வீழ்த்த முடியாது எனவும் அதே நபர் தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகர் கீவிற்குள் நுழைவதற்கு முன்பு, அங்கு நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு குறித்த படங்களும் ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோக்களின் அடிப்படையில், கீவில் குழு மோதல்கள் அதிகளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 







சிறைவாசிகளைப் போருக்காக விடுதலை செய்வதாக உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி அறிவித்த போது, உலகம் முழுவதும் அவரது அறிவிப்பு கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.