Dawood Ibrahim: சர்வதேச நாடுகளால் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிமிற்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாவூத் இப்ராஹிம் மருத்துவமனையில் அனுமதி:
நிழல் உலக தாதா எனப்படும் தாவூத் இப்ராஹிம் கடுமையான உடல்நலக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு விஷம் வைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது வரை அது உறுதிப்படுத்தப்படவில்லை. இரண்டு நாட்களாக அவர் மருத்துவமனையில் இருக்கும் சூழலில், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்டடத்தில் தாவூத் இப்ராஹிம் இருக்கும் மாடியில் அவருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், மருத்துவமனையின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அப்பகுதியை அணுக முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான கூடுதல் தகவல்களை சேகரிக்க, தாவூத் இப்ராஹிம் உறவினர்களான அலிஷா பார்கர் மற்றும் சஜித் வாக்லே ஆகியோரிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
தேடப்படும் குற்றவாளி:
65 வயதான தாவூத் இப்ராஹிம் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகளில் மிக முக்கிய நபராக இருக்கிறார். உலகளவிலான பல்வேறு விசாரணை அமைப்புகளுக்கு புலப்படாமல், பல ஆண்டுகளாக அவர் மும்பையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. திட்டமிட்ட சதி, தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம், 1993ல் நடைபெற்ற மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாகவும் செயல்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கராச்சியில் உள்ள அப்மார்க்கெட் கிளிஃப்டன் பகுதியில் அவர் வசித்து வருவதாக இந்தியா பலமுறை குற்றம்சாட்டினாலும், பாகிஸ்தான் அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.
என்.ஐ.ஏ. குற்றச்சாட்டு:
தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்க்கரின் மகனிடம் கடந்த ஜனவரி மாதம், தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டது. அப்போது, ”தாவூத் இப்ராஹிம் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிறகு கராச்சியில் தங்கியிருப்பதாகவும், அவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் இருப்பதாகவும், முதல் இரண்டு மகள்களுக்கு திருமணமாகிவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனிடையே, தாவூத் இப்ராஹிமுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தேசிய புலனாய்வு முகமையின் குற்றப்பத்திரிகையில், அவரும் அவரது உயர்மட்ட உதவியாளர்களும் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தைக் கட்டுப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை தாக்கி இந்திய மக்களிடையே பயங்கரவாதத்தால் அச்சத்தை ஏற்படுத்த, தாவுத் இப்ராஹிமின் டி-கம்பெனி ஒரு சிறப்பு பிரிவை நிறுவியுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளது. மும்பையில் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள், கள்ளநோட்டு போன்ற பல குற்றச் செயல்களை இன்று வரை டி-கம்பெனி கட்டுப்படுத்துவதாக, உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டின் (GTI) 10வது பதிப்பு எச்சரித்துள்ளது. அல்-கொய்தா உள்ளிட்ட உலகளாவிய தீவிரவாத குழுக்களுடனும் அந்த அமைப்பு வலுவான தொடர்புகளைக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.