உலக நாடுகளின் மீது காலநிலை மாற்றம், மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிக அளவில் வெள்ளம் ஏற்படுவதற்கும் இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதற்கும் காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.


காலநிலை மாற்றத்தை சமாளிக்க முடியாமல் திணறும் நாடுகள்:


தீவிரமான வானிலைக்கு காரணமான காலநிலை மாற்றத்தை சமாளிக்க முடியாமல் வளர்ந்த நாடுகள் மட்டும் அல்ல வளரும் நாடுகளும் 
திணறி வருகின்றன. சமீபத்தில், சென்னையில் புயல் காரணமாக பெய்த கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இது, மக்களின் வாழ்க்கையை திருப்பிப்போட்டது.


சமீப காலமாக, லா நினா மற்றும் எல் நினோ வானிலை மாற்றத்தால் ஆஸ்திரேலியா பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. 
எல் நினோ என்பது இயல்பை விட அதிகமான வெயில் அடிக்கும் வானிலை நிகழ்வாகும். இதனால்தான், காட்டுத்தீ, சூறாவளி, வறட்சி மற்றும் வெப்ப அலைகள் போன்ற தீவிமான வானிலை மாற்றங்கள் ஏற்படுகிறது.


லா நினா என்பது இயல்பை விட அதிகமான பனிப்பொழிவு பெய்யும் வானிலை நிகழ்வாகும். கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட லா நினா வானிலை நிகழ்வால் கிழக்கு ஆஸ்திரேலியா பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. நூற்றாண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டது. இதனால், வடக்கு ஆஸ்திரேலியாவும் பாதிக்கப்பட்டது.


ஆஸ்திரேலியாவை திருப்பிப்போட்ட வெள்ளம்:


இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நேற்று விடாத பெய்த கனமழை அந்நாட்டை திருப்பிப்போட்டுள்ளது. இதனால், உயரமான நிலபரப்புக்கு செல்லுமாறு குவின்ஸ்லாந்து மாகாணத்தில் வாழும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து குவின்ஸ்லாந்து மாகாண அரசு தரப்பு வெளியிட்ட எச்சரிக்கை செய்தியில், "கெய்ர்ன்ஸின் சில புறநகர்ப் பகுதிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலியா தலைநகர் பிரிஸ்பேனுக்கு வடக்கே 1,700 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது கெய்ர்ன்ஸ் நகரம். கெய்ர்ன்ஸ் நகரில் நிலவி வரும் நிலைமை குறித்து தகவல் வெளியிட்டுள்ள குயின்ஸ்லாந்து தீ மற்றும் அவசர சேவைத்துறை, "தொடர் மழை மற்றும் உயர்ந்து வரும் கடல் மட்டம் காரணமாக இந்த பகுதியில் வெள்ளம் ஏற்படலாம். குடியிருப்பாளர்கள் இப்போது உயரமான பகுதிக்கு செல்ல வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


 






சூறாவளி ஜாஸ்பர் காரணமாக கெய்ர்ன்ஸ் நகரில் கனமழை பெய்தது. இதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளத்தில் நகரின் பெரும்பாலான பகுதிகள் மூழ்கின. வெள்ளத்தால் மின்சாரம் தடைப்பட்டது. அங்கு வாழும் ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேற்று பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.