மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கான சர்வதேச மன்றத்தின் அழைப்புகளுக்கு மத்தியில், இஸ்ரேல் அதன் தாக்குதலை விரிவுபடுத்தி, இறுதியில் காசா மீதான முழுப் படையெடுப்பு நடத்தி தாக்குதலை நடத்த உள்ளதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேல் - ஹமாஸ்:


இருதரப்புக்கும் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில் இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் போராளிகள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி வருகின்றனர். இஸ்ரேலின் வான் மற்றும் தரைப்படைகள் ஹமாஸ் மீதான தாக்குதல்களை விரிவுபடுத்தியது, அதேசமயம் காசா பகுதியை நிர்வகிக்கும் இஸ்லாமியக் குழு இஸ்ரேலிய தாக்குதல்களை 'முழு பலத்துடன்' எதிர்கொள்வதாக உறுதியளித்தது. 


இதுவரை வான் வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல்  நேற்று முன்தினம் இரவு தரை வழி தாக்குதலை தொடங்கியது.  இஸ்ரேலிய தரைப்படைகள் வடக்கு காசா பகுதிக்குள் சோதனை அடிப்படையில் நுழைந்து வெளியேறியது. படைகள் வெளியேறும் முன்  ஹமாஸ் இலக்குகளைத் கடுமையாக தாக்கியது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ வானொலி அறிவிப்பை வெளியிடுகையில், தற்போது நடைபெற்று வரும் போரின் மிகப்பெரிய ஊடுருவல் இதுவே ஆகும் என தெரிவித்துள்ளது.  இது தொடர்பான வீடியோவில் இஸ்ரேல் அதன் தரைவழி படைகளை காசாவில் நுழையும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. 






ஐ.நா. பொதுச் செயலாளர் வேதனை: 


இதனிடையே ஐ.நாவின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டெரஸ், காசாவில் நிலமை மிகவும் மோசமடைந்துள்ளது என்றும் இதனால் 20 லட்சம் மக்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் எரிபொருள் ஆகியவை அங்கு இருக்கும் மக்களை சென்றடைய வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 






மேலும், தனது எக்ஸ் பக்கத்தில், ”மத்திய கிழக்கில் மனிதாபிமான போர் நிறுத்தம், அனைத்து பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்தல் மற்றும் தேவையான அளவில் உயிர்காக்கும் பொருட்களை வழங்குதல் ஆகியவற்றுக்கான எனது அழைப்பை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புகளை ஏற்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.  


இதற்கிடையில், இஸ்ரேல் காசாவில் இணையம் மற்றும் தகவல்தொடர்புகளைத் முற்றிலுமாக துண்டித்துள்ளது, கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் பிறரை தொடர்பு கொள்ள் முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில், அரபு நாடுகளால் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் காசாவுக்குள் உதவிகளை அனுமதிக்கும் தீர்மானம் வலுவான ஆதரவைப் பெற்று, அதற்கு சாதகமாக  120 வாக்குகள் பெற்றது.