உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் போர் எப்போது முடியும், எப்படி முடியும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. ரஷ்யா தற்போது கிழக்குப் பகுதிக்கு தனது தாக்குதல் இலக்கை மாற்றியுள்ள நிலையில், உருக்குலைந்த நகரங்களில் உள்ள மக்களின் உள்ளக் குமுறல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.


உக்ரைன் தலைநகர் கீவில் வசிக்கும் பெண் ஆனா (50) பெயர் மாற்றப்பட்டுள்ளது, தனக்கு நேர்ந்த துயரங்களை விவரித்துள்ளார்.


ஆனாவின் வார்த்தைகளில்..


மார்ச் 7 ஆம் தேதி என் வாழ்க்கையின் கொடூரமான நாள். நானும், என் கணவரும் வீட்டில் இருந்தோம். திடீரென ரஷ்ய வீரர்கள் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் என்னை மிரட்டி அழைத்துச் சென்றனர். அருகிலிருந்த ஒரு வீட்டுக்குள் என்னைக் கூட்டிச் சென்றனர். என்னை ஒரு ரஷ்ய ராணுவ வீரன் அறைக்குள் தள்ளினான். என் ஆடைகளை அப்புறப்படுத்தச் சொன்னான். முடியாதென்றால் சுட்டுவிடுவேன் என்றான். அவன் என்னைவிட இளையவன். அவன் என்னை பலவந்தப்படுத்தி உறவு கொண்டிருந்த போது மேலும் 4 பேர் அங்கு வந்தனர். நான் இன்றுடன் என் வாழ்க்கை முடிந்தது என நினைத்தேன்.


ஆனால், அவர்கள் அவனை அழைத்துச் சென்றனர். நான் உடனே அங்கிருந்து அழுகையுடன் என் வீட்டுக்கு ஓடினேன். என் கணவர் வயிற்றில் சுடப்பட்டு கிடந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூட முடியவில்லை. ஏனெனில், ஊரங்கும் சண்டை நாங்கள் எங்கே செல்ல முடியும். இரண்டு நாட்கள் காயங்களுடன் துடிதுடித்து அவர் இறந்தார். இவ்வாறு தனது துயரை ஆனா விவரித்தார்.


ஆனா மட்டுமே உக்ரைன் போர் துயரத்தின் ஒற்றை சாட்சியல்ல. ஊர் முழுவதும் குடும்பங்கள், குழந்தைகள், உடைமைகளை இழந்த மக்கள் இருக்கின்றனர்.


புச்சா நகரில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உடல்கள் தான் ரஷ்யாவை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து நீக்கச் செய்துள்ளது.


கீவ் நகரில் ஆனாவுக்கு நேர்ந்தது போல் பல கொடூரக் கதைகள் க்ரிவி ரிஹ் நகரில் இருப்பதாக அந்நகரின் ராணுவ நிர்வாகத் தலைவர் ஒலக்ஸாண்டர் விகுல் கூறியுள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், இங்கே பல கொடுமையான கதைகள் நடக்கின்றன என வீடியோ பதிவில் பேசியுள்ளார். கெர்சான் துறைமுக நகரிலிருந்து படகில் தப்பிக்க முயன்ற 14 பேரை ரஷ்யப் படைகள் தாக்கின. இதில் 4 பேர் பலியாகினர். 7 பேர் மருத்துவமனையில் உள்ளனர். எஞ்சியவர்கள் நிலை என்னவானது எனத் தெரியவில்லை. இங்குள்ள ஒரு குக்கிராமத்தில் 16 வயது சிறுமியையும், 78 வயது மூதாட்டியையும் ரஷ்யப் படையினர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளன. அந்தச் சிறுமி கர்ப்பமாக இருந்தார். அதைக் கூட கண்டுகொள்ளாமல் ரஷ்யப் படைகள் அத்துமீறியுள்ளன என்று அவர் பல கொடூரங்களையும் பட்டியலிட்டுள்ளார்.