கடந்த ஆண்டு திருமணங்களிலேயே கவனிக்க வைத்த திருமணம் என்றால் ஜப்பான் இளவரசியில் திருமணம்தான். ஜப்பான் இளவரசி மகோ, அரண்மனையிலிருந்து வெளியேறி தனது காதலர் கொமுரோவை கடந்த ஆண்டு அக்டோபரில் திருமணம் செய்துக் கொண்டார். ஒரு சாமானியரைத் திருமணம் செய்து கொண்டதன் மூலம் அரசுக் குடும்ப பட்டத்தை இழந்ததோடு தனக்கு சீதனமாக அளிக்கப்படவிருந்த 7000 கோடி ரூபாயையும் வேண்டாம் என சொல்லிவிட்டார் இளவரசி மகோ. 


ஜப்பானின் பட்டத்து இளவரசரின் மகளும், பேரரசர் நருஹிட்டோவின் மருமகளுமான மகோ அந்நாட்டை சேர்ந்த சாமானியரான கொமுரோவைப் பல ஆண்டுகளாகவே காதலித்து வந்தார். அரசக் குடும்பத்துப் பெண்கள் சாதாரண நபர்களைத் திருமணம் செய்துகொள்ள தடை உள்ளது. அதன்படி சாமானியனை மணந்து தற்போதும் தானும் சாமானியராக மாறியுள்ளார் மகோ. இந்நிலையில் தற்போது மகோ வேலைக்குச் செல்லவுள்ளார்.  திருமணத்தை முடித்துக்கொண்டு கடந்த ஆண்டு நவம்பரில் தன்னுடைய கணவருடன் நியூயார்க்கில் குடியேறினார் மகோ.




இப்போது, அமெரிக்காவின் நியூயார்க்கின் மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்டில் நகரத்திற்குச் சென்று  ஆறு மாதங்களுக்கு தன்னார்வத் தொண்டு செய்கிறார். இந்த அருங்காட்சியத்தில் வேலை செய்ய முன்னாள் இளவரசி ஊதியம் எதுவும் வாங்கவில்லை என்றும், ஒரு தொண்டாகவே இதனை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஜப்பான் நாட்டு செய்தித்தளங்கள் வெளியிட்ட செய்தியின்படி, ஜப்பானிய சுருள் ஓவியங்களின் மெட் கண்காட்சியில் மாகோ பணிபுரிய உள்ளதாக கூறப்படுகிறது. டோக்கியோவின் சர்வதேச கிறித்தவப் பல்கலைக்கழகத்தில் கலந்து கொண்ட மாகோ, கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் பட்டம் பெற்றவர். 


முன்னதாக பல தடைகளைத் தாண்டி இந்த திருமணத்தை செய்துகொண்டார் மகோ. இளவரசி மகோ ஒரு சாமானியரைத் திருமணம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜப்பானியர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ‘ஜப்பான் மற்றும் அரசக்குடும்பத்தின் எதிர்காலம் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்’ போன்ற பதாகைகளை ஏந்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  “இந்த திருமணம் பிரச்சினைகள் நிறைந்தது. அரசுக் குடும்பம் குற்றங்களில் ஈடுபடுவதை நாங்கள் விரும்பவில்லை” என்றும் அவர்கள் தெரிவித்தனர். 


முன்னதாக, திருமணம் குறித்த சர்ச்சை எழுந்தபோது பல்வேறு இடையூறுகளின் காரணமாக இளவரசி மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண