உக்ரைன் - ரஷிய போர், கடந்த ஆறு மாதங்களாக நீடித்து வருகிறது. தொடர்ந்து வரும் போர், ராணுவ வீரர்களையும் மக்களையும் சோர்வில் ஆழ்த்தியுள்ளது. போர் களத்தின் வாயிலாக மட்டும் இன்றி இணையம் வழியாகவும் ஹேக்கர்கள் போரை தொடுத்து வருகின்றனர்.


 






உக்ரேனிய ஹேக்கர்கள் கவர்ச்சிகரமான பெண்களின் புகைப்படங்களைக் கொண்டு போலி கணக்குகளைப் பயன்படுத்தி ரஷிய ராணுவ வீரர்களின் இருப்பிடத்தைக் கேட்டு பெறுகின்றனர். பின்னர் அவர்கள் உக்ரேனிய இராணுவத்திற்கு தகவல் கொடுக்கின்றனர். இது பற்றிய செய்தி Financial times-இல் வெளியாகி உள்ளது. 


இந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி, ரஷியாவின் படையெடுப்பு தொடங்கியபோது தனது ஹேக்கிங் திறன்களை தனது நாட்டிற்கு பயன்படும் வகையில் பயன்படுத்த விரும்பியதாக கார்கிவைச் சேர்ந்த 30 வயதான தகவல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர் நிகிதா நைஷ் Financial timesக்கு பேட்டி அளித்துள்ளார்.


கூடுதல் ஹேக்கர்களை சேர்த்து கொண்டு, Hackyourmom என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார். அதில், தற்போது நாடு முழுவதிலுமிருந்து 30 ஹேக்கர்கள் இருக்கின்றனர். டெலிகிராம் உள்பட பல சமூக ஊடகங்களில், கவர்ச்சிகரமான பெண்களின் புகைப்படங்களை கொண்டு போலி கணக்குகளை உருவாக்கி கடந்த மாதம் மெலிடோபோலில் ரஷிய வீரர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என நிகிதா தெரிவித்துள்ளார்.


ரஷிய ராணுவ வீரர்களின் தகவல்களை தெரிந்து கொள்ளவும், இறுதியில் அவர்கள் சண்டையிடும் படங்களை கேட்டு பெறவும் ஹேக்கர்களால் முடிந்துள்ளது. புகைப்படங்களை ரஷிய ராணுவ வீரர்கள் அனுப்பியதை தொடர்ந்து, தெற்கு உக்ரைனில் ரஷியாவால் கைப்பற்றப்பட்ட மெலிடோபோல் அருகே உள்ள தொலைதூர ராணுவ தளத்திலிருந்து ராணுவ வீரர்கள் அந்த புகைப்படங்களை எடுத்ததை ஹேக்கர்கள் கண்டு பிடித்துள்ளனர்.


உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு முன்பு இவ்வளவு பெரிய அளவிலான இணைய மோதல்கள் நடைபெற்றதில்லை. அரசின் ஆதரவில் இயங்கி வரும் குழுக்கள், இதனை பயன்படுத்தி தங்களின் போட்டியாளர்களை ஏமாற்றி வருகின்றனர். இதனை பயன்படுத்தி, குற்றவாளிகள் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.


 






ரஷிய தொழிலதிபர், ரஷிய அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஹேக்கிங் தொடர்பான கதைகள் இணையம் முழுவதும் பரவியுள்ளது.