உக்ரைனில் இறந்த மாணவன் நவீனின் நண்பர் அவரது உடல் எங்கு எனத் தெரியவில்லை என கதறலுடன் தெரிவித்துள்ளார்.


உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அந்நாட்டில் வசித்து கல்வி பயின்று வந்த இந்திய மாணவர் ஒருவர் இன்று கார்கிவ் நகரத்தில் நிகழ்ந்த குண்டுவீச்சில் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

உயிரிழந்த மாணவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா ஞானகவுடர் என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவுக்காக வரிசையில் நின்று கொண்டிருந்த போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் அவர் இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையர் மனோஜ் ராஜன் இதுகுறித்து, `வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, உக்ரைனில் நவீன் சேகரப்பா உயிரிழந்த துயரச் சம்பவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தின் சலகேரி பகுதியைச் சேர்ந்த அவர், அருகில் இருந்து கடைக்கு உணவு வாங்க சென்றுள்ளார். அதன்பிறகு, அவருடைய நண்பருக்கு அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து வந்த ஃபோன் அழைப்பில அவர் இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.




`உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரத்தில் இன்று காலை நிகழ்ந்த குண்டுவீச்சில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவிக்கிறோம்’ என வெளியுறவுத்துறை சார்பில் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் மாணவரின் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளது.





உயிரிழந்த மாணவர் நவீன் சேகரப்பாவின் தந்தையுடன் இன்று தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளார்.




ரஷ்யா கடுமையான ராணுவத் தாக்குதலை நடத்தி வரும் கார்கிவ் நகரத்தில் அதிகளவிலான இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, வெளிநாடுகளுக்கான செயலாளர் ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளின் தூதர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கார்கிவ் உள்ளிட்ட போர் பாதிக்கப்பட்ட நகரங்களில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களுக்கு உடனடியாக பாதுகாப்பான வெளியேற்றம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

`உக்ரைன், ரஷ்யா ஆகிய நாடுகளில் உள்ள இந்தியத் தூதர்களும் இந்தப் பணியைத் துரிதமாக மேற்கொள்ள முயன்று வருகின்றனர்’ என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.